தொல்காப்பியனார் காலம்

Tolkappian period

Authors

  • க.வெள்ளைவாரணனார் | K. Vellaivaranar ஆய்வறிஞர்

Keywords:

தொல்காப்பியனார் காலம், தொல்காப்பியனார், காலம்

Abstract

தொல்காப்பியனார் பாரத காலத்துக்கு முற்பட்டவர் என்பது

          பாண்டவர்க்கும் நூற்றுவர்க்குமிடையே நிகழ்ந்த பாரதப் போரில் இருதிறத்துப் படைவீரர்களுக்கும் உதியஞ்சேரலாதன் என்னுந் தமிழ் மன்னன் அப்பெரும்போர் முடியுமளவும் பெருஞ்சோறு கொடுத்து உதவினன். முரஞ்சியூர் முடிநாகராயர்[1] என்னும் புலவர் இவ்வேந்தனை முன்னிலைப்படுத்து வாழ்த்திய பாடலொன்று புறநானூற்றிற் கடவுள் வாழ்த்தினையடுத்து முதலாவதாகத் தொகுக்கப்பெற்றுள்ளது. அப்பாடலில்,

            அலங்குளைப் புரவி யைவரொடு சினைஇ

          நிலந்தலைக் கொண்ட பொலம்பூந் தும்பை

          ஈரைம் பதின்மரும் பொருதுகளத் தொழியப்

          பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்

என முடிநாகராயர் உதியஞ்சேரலாதனை முன்னின்று அழைத்துப் போற்றியுள்ளார். அசைந்த தலையாட்ட மணிந்த குதிரையுடைய பாண்டவர் ஐவருடனே சினந்து நிலத்தைத் தம்மிடத்தே  கொண்ட பொற்பூந் தும்பையினையுடைய துரியோதனன் முதலாகிய நூற்றுவரும் பொருது போர்க்களத்தின்கட் படுந்துணையும் பெறுஞ்சோறாகிய மிக்கவுணவை இருபடைக்கும் வரையாது வழங்கினோய் என்பது மேற்காட்டிய தொடரின் பொருளாகும்.

 

[1] முடிநாகனார் என்னும் பெயரே ஏடெழுதுவோரால் முடிநாகராயர் எனப் பிற்றைநாளில் திரித்து எழுதப்பட்டிருத்தல் வேண்டும். புறத்திணை நன்னாகனார், கண்ணனாகனார், நன்னாகனார் பெட்டனாகனார் என வழங்கும் பண்டை இயலிசைப் புலவர் பெயர்கள் ஈண்டு ஒப்புநோக்குதற்குரியன.

References

அறிஞர் M.சீனிவாசையங்காரவர்கள் தாம் எழுதிய Tamil Studies என்னும் நூலில் நிலந்தரு திருவிற் பாண்டியன் கி.மு.350–ல் இருந்தவனென்றும் அக்காலமே தொல்காப்பியனார் வாழ்ந்த காலமென்றும் குறிப்பிடுவர். அறிஞர் T.R.சேஷையங்காரவர்கள் பாணினி முனிவர் காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டென்றும் பாணினிக்குக் காலத்தால் பிற்பட்டவரே தொல்காப்பியனாரென்றும் தொல்காப்பியச் சிறப்புப்பாயிரம் பிற்காலத்தே செய்து சேர்க்கப்பட்டதென்றும் கூறுவர். மேற்குறித்த அறிஞர்கள் தம் கொள்கையினை நிறுவுவதற்குத்தக்க சான்றுகளைக் காட்டவில்லை . எனவே அவர் தம் கொள்கைகளை ஊகமாகவே கருதுவதன்றி உண்மையெனக் கொள்ளுதற்கு இடமில்லை. (தொடரும்…)

Published

10.11.2016

How to Cite

தொல்காப்பியனார் காலம்: Tolkappian period. (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(7), 3-8. https://inamtamil.com/index.php/journal/article/view/157

Similar Articles

1-10 of 195

You may also start an advanced similarity search for this article.