தொல்காப்பியனார் காலம்

Tholkappiyar period

Authors

  • க.வெள்ளைவாரணனார் | K. Vellaivaranar

Keywords:

தொல்காப்பியனார் காலம், தொல்காப்பியர், காலம்

Abstract

இதழ் 5இன் தொடர்ச்சி...

தொல்காப்பியமும் சங்க இலக்கியமும்

            தொல்காப்பிய விதிக்கு மாறான சொல்வழக்குகள் சில திருக்குறளிலும் சங்கத் தொகை நுல்களிலும் காணப்படுகின்றன. தொல்காப்பியனார் காலத்தில் கள் என்னும் பன்மை விகுதி அஃறிணையில் மட்டுமே வழங்கியது. கள்ளொடு சிவணு மவ்வியற் பெயரே, கொள்வழி  யுடைய பலவறி சொற்கே, என வரும் சூத்திரத்தால் இவ்வுண்மை புலனாம். பூரியர்கள் (919), மற்றையவர்கள் (263) எனத் திருக்குறளிலும், தீதுதீர் சிறப்பின் ஐவர்கள் நிலைபோல (கலி-26) எனக் கலித்தொகையிலும் உயர்திணைப் பெயரையடுத்துக் கள் விகுதி பயின்று வழங்குவதற்குத் தொல்காப்பியத்தில் விதி கூறப்படவில்லை. அன் விகுதி ஆண்பாற் படர்க்கைக்கே யுரியதெனத் தொல்காப்பியர் வரையறுத்துள்ளார். இவ்விதிக்கு மாறாக இரப்பன் இரப்பாரை யெல்லாம் என வருந் திருக்குறளில் அன் விகுதி தன்மை யொருமையில் வழங்குகின்றது. இவ்வாறே கைவிடுக லேனே (அகம்-193), உதவியோ வுடையன் (அகம்-186), நினைக்கியான் கிளைஞ  னல்லனே (அகம்-343), யான் வாழலனே (அகம்-362), உள்ளா ராயினு முளனே (அகம்-378), மிகுதிகண் டன்றோ விலனே (அகம்-379), னியறிந்தன்றோ விலனே (அகம்-384), அமளி தைவந் தனனே, அளியன் யானே (குறுந்-30), நீயலன் யானென (குறுந்-36), யான் இழந் தனனே (குறுந்-43), விடல்சூ ழிலன்யான் (குறுந்-300), யான்கண் டனனோ விலனே  (குறுந்-311), உளனே  (குறுந்-316), உரைத்தனன் யானாக (புறம்-136), அந்தணன் புலவன் கொண்டுவந் தனனே (புறம்-201), கூறுவன் வாழி தோழி (நற்-233), உள்ளின னல்லனோ யானே (நற்-326), யான்தொடங் கினனாற் புரந்தரவே (ஐங்-428) என இவ்வாறு எட்டுத்தொகை நூல்களிலும் அன் விகுதி தன்மை யொருமையில் வழங்கப் பெற்றுளது.[1]

[1] எதிர்காலம் பற்றி வரும் அல் விகுதியினையே பிற்காலத்தார் அன் ஈறாக வழங்குவர் என நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். எனவே தொல்காப்பியனார் காலத்தில் அன் விகுதி தன்மைக்கண் வழங்கப்பெறவில்லை யென்பதும் மிகவும் பிற்பட்ட காலத்திலேயே அன்னீறு தன்மையொருமையில் வழங்கப்பெற்றிருத்தல் வேண்டுமென்பதும் தெளிவாதல் காண்க.

References

இதுகாறும் எடுத்துக்காட்டியவற்றால், ஆசிரியர் தொல்காப்பியனார் இயற்றிய இயற்றமிழிலக்கண நூலாகிய தொல்காப்பியம் சங்கச் செய்யுட்களுக்கும் திருக்குறளுக்கும் நெடுங்காலத்துக்கு முன்னரே இயற்றப்பெற்ற தொன்மையுடையதென்பது இனிது புலனாதல் காணலாம்.

Published

10.08.2016

How to Cite

தொல்காப்பியனார் காலம்: Tholkappiyar period. (2016). இனம்: பல்துறைப் பன்னாட்டு இணையத் தமிழாய்விதழ் (Inam: Multidisciplinary International E-Journal of Tamil Studies), 2(6), 14-18. https://inamtamil.com/index.php/journal/article/view/150

Similar Articles

171-180 of 195

You may also start an advanced similarity search for this article.