Vol. 10 No. 38 (2024): மலர் : 10, இதழ் : 38 மே (May) 2024

					View Vol. 10 No. 38 (2024): மலர் : 10, இதழ் : 38 மே (May) 2024

பத்தாம் ஆண்டுப் பயணத்தில் ‘இனம்’

2015இல் தொடக்கம். தமிழியலில் அச்சு இதழ்கள் பரவலாகக் கவனம் பெற்றிருந்த காலம் அது. கோயமுத்தூரிலிருந்து, தொலைபேசி உரையாடலினூடாக “நாம் இருவரும் சேர்ந்து இதழ் ஒன்று தொடங்குவோமா?” என்று செய்தி வந்து விழுந்தது. எதிர்முனை திருச்சிராப்பள்ளியில். “இதழ் தொடங்குவதென்றால் பொருளாதாரம் அதிகம் தேவைப்படுமே? நாம் இருவருமே சுயநிதிப் பிரிவில் சில ஆயிரங்கள் ஊதியம் பெற்றுக்கொண்டு எவ்வாறு சாத்தியம்? எனும் இரு வினாக்கள் எதிர்முனையிலிருந்து. அப்படியெனில் மின்னிதழ் தொடங்குவோமே! எனும் நேர்மறைத் தகவல் மறுமுனையிலிருந்து. “இதழுக்குரிய பெயரையும் நீங்களே முடிவு செய்து கூறுங்கள்” எனும் கூடுதல் பொறுப்பும் வந்தது. இப்போது பெயர் குறித்த சிந்தனையில். 

ஒற்றைச்சொல்லாகத் திகழ வேண்டும்; சிறுசொல்லாகத் திகழ வேண்டும்; குறிப்பாக, பன்மை அடையாளத்தை உணர்த்த வேண்டும் எனும் தொலைநோக்கோடு சிந்தித்த பெயரே ‘இனம்’.

எங்கள்மீது நன்மதிப்பும் ஆய்வில் தொடர் ஈடுபாடும் கொண்ட அறிஞர் பெருமக்களையும், இளம் ஆய்வாளர்களையும் தொடக்கத்தில் அணுகி, முன்ஒப்புதல் பெற்று, ஆலோசனைக் குழுவிலும் ஆசிரியர் குழுவிலும் இடம்பெறச் செய்தோம். அன்னாருள் பலரின் ஒத்துழைப்பு (நன்கொடை எனும் பெயரில், இதழ்க் கட்டுரை மதிப்பீடு எனும் பெயரில், பணிபுரியும் நிறுவனத்துடன் இணைந்து கருத்தரங்கினை ஒருங்கிணைத்தல், அவ்வப்போது தகுதியான ஆய்வுக்கட்டுரை வழங்குதல், என) தொடர்ந்து கிடைத்து வருகின்றது. அதனால்தான் இதழானது பத்தாண்டு மைல்கல்லை எட்டியுள்ளது. மகிழ்ச்சியும் நன்றியும்!

இடைப்பட்ட காலத்தில், இதழ் நிருவாக மேலாண்மைக்காக, உதவிக்காகப் பதிப்பகமும் தொடங்கப்பட்டது தனி நிகழ்வு. 

2017-2018வரை பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்புநிலை, GOOGLE SCHOLAR, ISSN, JOURNAL FACTOR, IIJIF, COSMOS, CITE FACTOR, SCIENTIFIC JOURNAL IMPACT FACTOR, JIFACTOR, ZENODO DOI, ARCHIVES என இதழின் பல்வேறு தள அடையாளங்களுடன் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இன்னும் இனம் போன்ற தமிழ் ஆய்விதழ்கள் உருவாக வழிகாட்டிய இனிமையும் உண்டு. இனம் ஆய்விதழில் வெளியிடப்பெறும் ஆய்வுகள் தரப்புள்ளிகள் (H index, I index போன்ற) பெறும் களங்களையும் ஆய்து வருகின்றது. இப்படி வளர்ச்சியை நோக்கிச் செல்லும் இனம் இடையில் சில மாதங்கள், தமிழர்க்கேயுரிய ‘புகைமை மனவுணர்வு’ காரணமாக இணையப் பக்கம் முடக்கம் எனும் எதிர்நிலையினூடாகவே இதழ் நடந்து வந்தது.

தமிழ்நாட்டிலிருந்து தற்போதைய காலம் வரைக்கும், ஆய்வு நெறிமுறைகளைக் கவனத்திற் கொள்ளாத சில கட்டுரைகளும் வந்து சேர்கின்றன எனும் கசப்பான உண்மையையும், அயலகத்திலிருந்து (குறிப்பாக, இலங்கை, சிங்கப்பூரிலிருந்து) வரும் கட்டுரைகள் முறையான தரவுகளோடும் உரிய அணுகுமுறைகளைப் பின்பற்றியும் வந்து சேர்கின்றன எனும் இனிப்பான உண்மையையும் சொல்லியே ஆக வேண்டும். 

சமகால இதழ் வெளியீடுகளில் 95 விழுக்காடு மொழிப்பிழைகளின்றி வெளிவரும் ஆய்விதழ் எனும் பெயரைப் புறமதிப்பீட்டாளர்களால் பெற்ற தகுதிப்பாடு உடையது எனும் பெயரோடு, ஆய்வு முறையியலையும் கவனத்திற் கொண்டு, முன்னோக்கி நடைபோடுகின்றது ‘இனம்’.

மகிழ்வுடன்,

மு. முனீஸ்மூர்த்தி

சத்தியராஜ் தங்கச்சாமி

முதன்மைப் பதிப்பாசிரியர்கள்

*************

Published: 29.05.2024