Month: February 2017

பேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்

முன்னுரை “கடல் போல ஆழ்ந்தகன்ற கல்வியாளர்! கதிர்மணிக்குப் புகழ்மிகுந்த தலைமாணாக்கர்! கொடை அண்ணாமலை வள்ளல் அழகப்பர் பல் கலைக்கழகம் மொழிவளர்த்த தமிழ்ப் பேராசான் படிப்படியாய் முன்னேறித் துணைவேந்தரானார்! பைந்தமிழ் உலகத்தின் தனிவேந்தரானார்! மடிந்தாராம் மாணிக்கம்! ஐயோ! இல்லை! மூதறிஞர் பயின்றமிழாய் வாழ்கின்றாரே”  (வ.சுப.மாணிக்கனாரின் சிந்தனைகள், ப.104) என்று அவரது மாணாக்கர் பேராசிரியர் பழ. முத்துவீரப்பனாரால் புகழப்படுகின்ற பெருந்தகையாளர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார். பேராசிரியரின் பார்வையில் திறனாய்வுச் சிந்தனைகள் குறித்து இனங்காண்பதாய் இக்கட்டுரை அமைகின்றது. வாழ்வும் பணியும் பேராசிரியர் வ.சுப.மாணிக்கனார் 1917ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 14ஆம் நாள் புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்தவர். ஆறு வயது நிறைவடைவதற்குள்ளாகவே தாய் தந்தையரை இழந்திருந்தார். எனினும் பொய் சொல்லா மாணிக்கமாக வாழ்ந்த பெருமைக்குரியவர். வித்துவான், பி.ஓ.எல், எம்.ஏ, எம்.ஓ.எல், முனைவர் பட்டங்கள் பெற்றவர். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறைத் தலைவராகவும் புலமுதன்மையராகவும், காரைக்குடி அழகப்பா கல்லூரியில் முதல்வராகவும் பதவி வகித்தவர். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தராகவும் விளங்கியவர். மேலும் படைப்பிலக்கியம், கடித இலக்கியம், உரை எனத் தமிழிலும் ஆங்கிலத்திலுமாகச் சுமார் இருபத்தைந்து நூல்களை வெளிக்கொணர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கனவாகும். ஆய்வு நூல்கள் வள்ளுவம் (1953), தமிழ்க்காதல் (1962), கம்பர் (1965), தொல்காப்பியப் புதுமை (1958), எந்தச்சிலம்பு? (1964), இலக்கிய விளக்கம் (1972), சிந்தனைக் களங்கள் (1975), ஒப்பியல் நோக்கு (1978), தொல்காப்பியத்திறன் (1984), இரட்டைக் காப்பியங்கள் (1958), நகரத்தார் அறப்பட்டயங்கள் (1961), The Tamil Concept of Love, A Study of Tamil Verbs, Collected Papers Tamilology. கவிதை நூல்கள் கொடைவிளக்கு (1957), மாமலர்கள் (1978), மாணிக்கக் குறள் (1991). நாடக நூல்கள் மனைவியின் உரிமை (1947), நெல்லிக்கனி (1962), உப்பங்கழி (1972), ஒரு நொடியில் (1972). கடித இலக்கியம் தலைவர்களுக்கு (1965) உரை நூல்கள் எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை (1989), திருக்குறள் தெளிவுரை (1991), நீதி நூல்கள் உரை (1991). ஆக இவை அனைத்தும் இவரின் கடின உழைப்பையும், வளர்ச்சியையும்  அடையாளம் காணும் இவர் குறித்த வாழ்வியல் வரலாறாய் அமைகின்றன. சமூகச் சிந்தனை பேராசிரியர், ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், தமிழ்ப்பற்றாளர், சமூகச் சிந்தனையாளர் என்பதாய்ப் பன்முகப் பரிணாமங்களோடு ஒளிரும் வ.சுப.மாணிக்கனார் சமூகத்தின் மீது ஆழ்ந்த கரிசனம் மிக்கவராகத் திகழ்ந்தவர்....

Read More

வ.சுப.மாவின் அச்சேறிய நூல்களும் நிறைவேறா ஆசைகளும்

1.0 முகப்பு  ‘‘ யாதும் ஊரே யாவரும் கேளிர்” எனும் சங்க இலக்கிய அடியைப் பாடிய கணியன் பூங்குன்றனாரும், பாரியும் கபிலரும், பண்டிதமணி கதிரேசச் செட்டியாரும்  பிறந்த மண்ணான பறம்பு மலையில் (தற்போது பிரான்மலை) உதித்த மற்றொரு சான்றோர் வ.சுப.மா. ஆவார். தொன்றுதொட்டுத் தமிழுக்குப் பெருமை சேர்த்த சான்றோர்களின் வரிசையில் புகழோடு தோன்றித் தமிழுக்கு அழகு சேர்க்கும் மாணிக்கமாகத் திகழ்ந்தார். இளம் வயதில் தன் பெற்றோரை இழந்தார். அவ்வப்போது தாய்வழிப் பாட்டி மீனாட்சி ஆட்சியும் தாத்தா அண்ணாமலை செட்டியாரும் கண்ணும் கருத்தாய் வளர்த்ததற்கு நன்றி மறவாது தன்னுடைய முதல் படைப்பில்  ‘‘என்னை உடனையார் ஏங்காதே வாழ்வளித்த அன்னை முதல்வர் அடிப்பணிந்தோம் உறவினர் வாழ உவந்தளிந்தார்; ஆயுள்  நிறையினர் நின்ற நெறி”   (மனைவியின் உரிமை) எனும் அடிகளின் மூலம் வள்ளுவர் கூறும் நன்றி மறவாமையைப் புலப்படுத்துகின்றார். தமிழாய்வு எனும் களத்தில் வ.சுப.மா. ஆற்றியுள்ள பங்களிப்பு அளப்பரியது. ’முனைவர்’,  ’மூதறிஞர்’, ’செம்மல்’, ’தமிழ்க் காந்தி’, ’தமிழ் இமயம்’ எனும் பல்வேறு புகழ்ப் பெயர்களைப் பெற்று விளங்கியவர். 1917ஆம் ஆண்டு இவ்வுலகக் காற்றினைச் சுவாசிக்கத் தொடங்கி, 1989ஆம் ஆண்டு சுவாசித்த காற்றை நுகர மறந்தார். பன்முகப் பரிமாணங்களில் தடம் பதித்த வ.சுப.மா. எழுத்துப்பணியில் தன்னை மூழ்கடித்துக் கொண்டார் என்று சொன்னால் அது மிகையாகாது. அவ்வகையில் இக்கட்டுரையானது, எழுத்துத் துறையில் தன்னைப் பதித்ததன் விளைவாயெழுந்த (அச்சேறிய) நூல்களையும், எதிர்காலத்தில் இன்ன பணி செய்ய வேண்டுமெனத் திட்டமிட்டு நிறைவேறா ஆசைகளையும் எடுத்து இயம்புவதாக அமைகின்றது. 2.0 பன்முகக் கல்வியாளர் வ.சுப.மா தனது தொடக்கக் கல்வியைத் தனது ஊரில் நடேச ஐயரிடம் கற்றார். பின்பு சன்மார்க்கச்சபை தொடர்பினால் பண்டிதமணியிடம் பழகும் வாய்ப்புக் கிட்டியது. தமிழ் படிக்க வேண்டுமெனும் தன் வேட்கையைப் பண்டிதமணியிடம் புகுத்தினார். அவரது ஆர்வத்தைக் கண்டு காரைக்குடி சொக்கலிங்க ஐயா தில்லையில் நிறுவிய வித்தியாசாலையில் புலவர் புகுமுக வகுப்பிற் சேர்ந்து உணவோடு தங்கிப் படிக்க ஏற்பாடு செய்தார். நான்காண்டுகள் பயின்று புலவரானார். பின்னர் 1940ஆம் ஆண்டு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை ஆய்வு மாணவராகச் சேர்ந்தார். தமிழிலக்கண வரலாறு தொடர்பான ஆய்வு செய்தமையால் அங்கேயே விரிவுரையாளர் ஆனார். தாமாகவே ஆங்கிலம் பயின்று 1945ஆம் ஆண்டு பி.ஓ.எல் புகுமுக வகுப்புத் தேர்வெழுதி வெற்றி பெற்றார்....

Read More

வ.சுப.மா.வின் சொல்லாக்க முறைகள்

தமிழ்ப் புத்திலக்கிய மரபில் பாரதியார், பாரதிதாசன், திரு.வி.க., மறைமலையடிகள், பாவாணர், கி.இராமலிங்கனார், அறிஞர் அண்ணா, ரசிகமணி டி.கே.சி. முதலியோர் புதிய சொல்லாக்கங்களைப் படைத்து அளித்துள்ளனர். இந்த வரிசையில் வ.சுப.மாணிக்கனாரும் தனது எழுத்துகளின்வழிப் பல புதிய சொல்லாக்கங்களைத் தமிழ் ஆய்வுலகிற்கு வழங்கியுள்ளார். இவற்றில் பல இன்றும் ஆய்வாளர்கள், ஆட்சியாளர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன. சில சொல்லாக்கங்கள் தனித்துவத்துடன் நிலைபேற்றை அடைந்துள்ளன. தமிழகப் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகப் பணியாற்றிய காலத்தில் வ.சுப.மா. உருவாக்கிய அலுவலகப் பயன்பாட்டிற்கான சொல்லாக்கங்கள் இன்றும் கையாளப்பட்டு வருகின்றன. குறிப்பாக ‘மொழிப்புலம்’, ‘புல முதன்மையர்’, ‘ஆளவை’, ‘ஆட்சிக் குழு’, ‘செம்பதிப்பு’ என்னும் சொல்லாக்கங்கள் பல்கலைக்கழகப் பயன்பாட்டில் உள்ளன. இச்சொற்கள் அனைத்தும் வ.சுப.மா. உருவாக்கியவை. இன்று புலமை உலகில் பலராலும் பரவலாகக் கையாளக்கூடிய சொல்லாகச் ‘செம்பதிப்பு’ நிலைபெற்றுவிட்டது. இச்சொல்லை உருவாக்கியவர் யார் என்று கேட்டால் அது பலருக்கும் தெரியாது. இதுபோல் இன்னும் பல சொற்களை வ.சுப.மாணிக்கம் உருவாக்கியுள்ளார். இவர் தனது நூல்களில் பயன்படுத்தியுள்ள தனித்தன்மை வாய்ந்த சொற்களையும் அவற்றின் ஆக்க முறைகளையும் இக்கட்டுரை கவனப்படுத்துகின்றது. இவரது நடைநலச் சிறப்பை, சொல்லாக்க முறையைச் ச.மெய்யப்பன் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார். இவர் நடையில் நின்றுயர் நாயகனாக விளங்குகிறார். இவர் நடை சொற் செட்டும் சுருக்கமும் தெளிவும் செறிவும் திட்பமும் வாய்ந்தது. புலமை நலம் சான்ற பெருமித நடை இவர் நடை. பழந்தமிழ்ச் சொற்கள் மிகுந்து வரும் இலக்கிய நடை. புதுச்சொற்கள் பொலியும் புதுவகை நடை. எல்லா வகையாலும் இவரது நடை தனித்தன்மை சான்றது. பேராசிரியருடைய மூன்று வரிகளைக் கொண்டே அவர் தமிழ்நடையின் தனித்தன்மையினை இனம் காணலாம். அவர் பயன்படுத்தும் சொற்கள், சொல்லாக்கம், சொல்லாட்சி ஆகியவை அவர் நடையின் இயல்பினை     இனங்காட்டுவன (சங்க நெறி, ப.v). குறிப்பாக வ.சுப.மாணிக்கம் தனது சொல்லாக்கத்தினைக் குறித்தும், புதிய சொல்லாக்கங்கள் எவ்வாறு தமிழ்மொழிக்குச் சிறப்பினைச் சேர்க்கின்றன என்பன குறித்தும் தனது நூல்களின் பல இடங்களில் குறிப்பிட்டுச் சென்றுள்ளார். அவற்றுள் ஒன்று: ‘‘வளம் படைத்த தமிழ்மொழிக்குச் சொல்லாக்கிகள் மிகத் தேவை. அவ்வப்போது சொல்லை வடித்துக் கொடுக்காதவன் – வடித்துக் கொள்ளாதவன், மொழிக்கடன் ஆற்றாதவன் ஆகின்றான்; வேற்றுச்சொல் வரவுக்கு இடங்கொடுப்பவன் ‘ஆற்றுபவன்’ ஆகின்றான்” (காப்பியப் பார்வை, ப.194) என்பது இவரது கருத்து. வ.சுப.மா.வின் சொல்லாக்கச் சிறப்பை விரிவாக ஆராய்ந்து மதிப்பீடு செய்த...

Read More

வ.சுப.மாணிக்கனாரின் தொல்காப்பிய உரைநெறிகள்

உரைக்களம் திருக்குறளுக்கு அடுத்தநிலையில் மிகுதியான உரைகளையும், பதிப்புக்களையும் கொண்ட நூல் தொல்காப்பியம். தமிழின் முதல்நூல் என வ.சுப.மாணிக்கனாரால் புகழ்ந்துரைக்கப்பட்ட தொல்காப்பியம், அவராலேயே உரை செய்யப்பட்ட பெருமைக்கும் உரியது. அவ்வுரைக்கண் இடம்பெற்றுள்ள உரைநெறிகளை மாதிரி அணுகுமுறையில் எடுத்துரைப்பது இம்முயற்சியின் நிலைக்களம் ஆகும். இவ்ஆய்வுரைக்குத் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் – நூன்மரபும் மொழிமரபும் – மாணிக்கவுரை அடிப்படையாகும். உரைநெறி பற்றிய நூல்களும், கட்டுரைகளும் இம்முயற்சிக்குத் துணைகளாகக் கொள்ளப்பட்டுள்ளன. மாணிக்கவுரை அறிமுகம் தமிழ்ப் பல்கலைக்கழக வல்லுநர் குழுவின் தலைவராகப் பணியாற்றிய வ.சுப.மாணிக்கனார் பல்கலைக்கழக அமைப்பினை உருவாக்கித் தந்தவர். மேலும், அப்பல்கலைக்கழகத்தின் தொல்காப்பியப் புலத்தகைமை ஆய்வுக்கட்டிலில் முதல் தகைஞராகவும் பணி செய்தவர். அப்பணிக்காலத்தில் தொல்காப்பியம் எழுத்ததிகாரம் நூன்மரபும் மொழிமரபும் மாணிக்கவுரை என்னும் உரைநூலை எழுதினார் எனச் ச.அகத்தியலிங்கம் எழுதிய அணிந்துரை கூறுகின்றது (வ.சுப.மாணிக்கம் 1989: ப.எ.இ.). எனினும், அவ்வுரை மாணிக்கனாரின் மறைவுக்குப் பின்னர்த் தமிழ்ப் பல்கலைக்கழக 120ஆம் வெளியீடாக 1989 அக்டோபர்த் திங்களில் (திருவள்ளுவர் ஆண்டு 2020 புரட்டாசித் திங்கள்) முதற்பதிப்பாக 22 ரூபாய் விலையில் வந்துள்ளது. அண்மைக்காலமாக ’ஐ.எஸ்.பி.என்.’ என்ற பன்னாட்டுப் புத்தகத் தர எண்  (பன்னாட்டுத் தரப்புத்தக எண் என மொழியாக்கமும் உண்டு எனினும், முற்கண்டவாறு வழங்குவது இயைபுடையதாகத் தோன்றுகின்றது) பற்றிய கருத்துக்கள் பரவலாகப் பேசப்படுவதையும், நூலாசிரியர்களும் கட்டுரையாசிரியர்களும் தவிப்பதையும் காண்கின்றோம். ஆனால், 27 ஆண்டுகளுக்கு முன்னரே மாணிக்கனாரின் தொல்காப்பிய உரை ஐ.எஸ்.பி.என். (81–7090–143–X) எண்ணுடன் வெளிவந்துள்ளமை குறிக்கத்தக்கது. மாணிக்கவுரைக்கு எழுதிய உரைப்பாயிரத்தில், “தொல்காப்பிய நினைவும் தொல்காப்பியக் கருத்தறிவும் பெறுதல் தமிழன் என்பான் ஒவ்வொருவனின் பிறப்புக் கடமையாகும்” என வ.சுப.மாணிக்கனார் (1989:II) முழங்குகின்றார். இளம்பூரணம், பேராசிரியம் என்னுமாப்போலத் தம் உரை மாணிக்கம் எனப் பெயர் பெறும் என்கின்றார். தொல்காப்பிய முழுமைக்கும் உரைசெய் நோக்கமும் உரைக்குறிப்புக்களும் உளவெனினும் காலப்பதம் பார்த்து முதற்கண் எழுத்ததிகாரத்துக்கு மாணிக்கவுரை எழுதியிருக்கின்றேன்” (வ.சுப.மாணிக்கம் 1989:III)  என்ற அவர்தம் கருத்து குறிக்கத்தக்கது. அவருரை தொல்காப்பிய முழுமைக்கும் எழுதப்படவில்லையே என்ற ஏக்கம் நமக்குள் இருந்தாலும், அவரால் எழுதப்பட்ட தொல்காப்பிய உரைக் குறிப்புக்களாவது அச்சுருக் கொள்ள வேண்டும். அதற்கு அவர்தம் கால்வழியினர் முழுமையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும் என்பது நமது வேண்டுகோள். தொல்காப்பிய உரைக்கண் தாம் மேற்கொண்ட உரைநயங்களைப் பற்றிய விரிவான குறிப்புக்களும் உரைப்பாயிரத்தின்கண் மாணிக்கனாரால் தரப்பட்டுள்ளமை குறிக்கத்தக்கது. ஒவ்வொரு உரைக்கூறும் இன்னின்ன...

Read More

பிற்கால நீதி நூல்கள் : வ.சுப.மாணிக்கனாரின் உரை இயல்புகளும் நடைத் தன்மைகளும்

வ.சுப.மாணிக்கனார் பிற்கால நீதி நூல்களான ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகியனவற்றிற்கு 1957இல் உரை எழுதியுள்ளார். இவ் உரை பல்வேறு பதிப்புகளைக் கண்டுள்ளது. இவ் உரையின் இயல்புகள் குறித்தும் நடைத் தன்மைகள் குறித்தும் விளக்குவதாக இவ் எழுத்துரை அமைகின்றது. உரை வரலாறு செம்மல், முதுபெரும்புலவர், பெருந்தமிழ்க் காவலர், முதுபேராய்வாளர் என்றெல்லாம் அழைக்கப்பெறும் வ.சுப.மாணிக்கனார் 17.04.1917 முதல் 25.04.1989 வரை வாழ்ந்தவர். புதுக்கோட்டை மாவட்டம் மேலைச்சிவபுரியில் பிறந்த இவரின் இயற்பெயர் அண்ணாமலை என்பதாகும். குருகுல முறையிலான தொடக்கக் கல்வியை தம் ஏழாம் வயது வரை மேலைச்சிவபுரி சன்மார்க்க சபையுடன் தொடர்புடைய நடேச ஐயரிடம் பயின்றார். அவரிடமிருந்துதான் ஆத்திசூடி, கொன்றைவேந்தன், நறுந்தொகை, மூதுரை, நல்வழி, நன்னெறி, உலகநீதி ஆகியவற்றைப் கற்றறிந்திருக்கிறார். தொழில் கற்பதற்காகப் பர்மா சென்று திரும்பிய இவரது உயர்கல்விக்கு வழிகாட்டியவர் பண்டிதமணி மு.கதிரேசச் செட்டியார் ஆவார். அவரின் வழிகாட்டுதல்படி அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வித்துவான் பட்டத்தையும் (1936-1940) சென்னைப் பல்கலைக் கழகத்தில் பி.ஓ.எல். (1945), முதுகலைப் (1951) பட்டங்களையும் பெற்றார். தொடர்ந்து ‘தமிழில் வினைச்சொற்கள்’ எனும் ஆய்வுக்காக எம்.ஓ.எல். (1948) பட்டத்தையும் ‘தமிழில் அகத்திணைக் கொள்கைகள்’ எனும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் (1957) பட்டத்தையும் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக விரிவுரையாளர் (1941-1948), காரைக்குடி அழகப்பா கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் (1948-1964), முதல்வர் (1964-1970), அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் & இந்திய மொழிப்புல முதன்மையர் (1970-1977), மதுரை காமராசர் பல்கலைக்கழகத் துணைவேந்தர் (17.08.1979 – 30.06.1982) என்று பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர் வ.சுப.மாணிக்கனார். தமிழகப் புலவர் குழுத் தலைவர், பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றத் தலைவர், தமிழ் வழிக் கல்வி இயக்கத் தலைவர், தமிழ்ப் பல்கலைக்கழக வடிவமைப்புக் குழுத்தலைவர், தமிழ்ப் பல்கலைக்கழகத் தொல்காப்பியத் தலைவர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்த வ.சுப.மாணிக்கனார் 21 தமிழ் நூல்களையும் 4 ஆங்கில நூல்களையும் 9 நூல்களுக்கு உரையையும் எழுதியுள்ளார். “ஆத்திசேர் கொன்றை அழகுதமிழ் மூதுரை பாத்திசேர் நல்வழி பண்புலகம் – பூத்த நறுந்தொகை நன்னெறி ஏழும் குழந்தைக் குறுந்தமிழ் என்றறிந்து கொள்” (2006:7) என்று பிற்கால நீதிநூல்களின் பெருமையை வெண்பாவாகப் பாடிய வ.சுப.மாணிக்கனார், “…தொல் மரபுப்படி “ஏழிளந்தமிழ்” மீண்டும் தொடக்கப் பள்ளிகளில் முழு நூல்களாக இடம்பெற வேண்டும்”...

Read More

ISSN : 2455-0531

Journal Number : 64244
✅ Approved by UGC, India.

Total no. of Visitors

Translate Website

Current Issues – Nov 2017