Month: November 2015

‘அடையாளம்’ காண்போம்

நூற்றி எட்டுத் திருத்தலங்கள் சென்று நொந்து திரிந்தாலும் பெறக் கிடைக்காத ஆத்மதிருப்தியை நான்கு சுவர் கொண்ட ஒரு நூலகத்தால் தரமுடியும். ஆனால், இக்கரைக் குளுமையை விட்டுவிட்டு அக்கரைக் கானலைத் தேடி அலைவதையே வாடிக்கையாக / வேடிக்கையாகக் கொண்ட இனம் நம் தமிழினம். நூலகங்களைச் செங்கல்லும் சிமெண்ட் கலவையும் கலந்த கட்டிடங்களாகப் பார்க்கும் மனநிலையே இன்று நம்மில் பலரிடம் மேலோங்கியுள்ளது. மாறாக, ‘எலும்புகளும் தசைகளும் இரண்டறக் கலந்துநிற்கும் இறவா உடலே நூலகம்; உடலின், உயிரின் அடிப்படை அலகான செல்களே நூலகத்து நூல்கள்’ எனும் மனநிலை உயிர்த்தெழும்போது நூலகப் பயன்பாடு மேலோங்கும். நூலகப் பயன்பாட்டை மேலோங்கச் செய்யும் சமூகமே செழுமை பெறும். நூலகமும் நூல்களும் ஒரு நல்நண்பன், நல்ஆசான், நல்வழிகாட்டி என்பனவற்றைத் தாண்டி, அடுத்த தலைமுறையினர் அமைதியாய் வாழவேண்டி நாம் அவர்க்கு விட்டுச் செல்லும் அசையா / அசையும் சொத்துக்கள் எனும் அடையாளத்தையும் பெறுகின்றன. ஓர் இனத்தை அழிப்பதற்கு அவ்வின மக்களின்மீது போர் தொடுத்து அவர்களது உயிரைப் பறிக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக, அவ்வினத்தாரது அறிவுசார் புழங்குபொருளான நூல்களடங்கிய நூலகத்தைப் பயன்படுத்த விடாது தடுத்தாலே போதுமானது. இத்தகைய (திட்டமிட்ட) அறிவுசார் இனஅழிப்பு வேலையே 1.6.1981இல் யாழ்ப்பாண நூலக எரிப்பாக அரங்கேறியது. ஏறத்தாழ 97,000 நூல்கள் தீக்கிரையான அவலம் இருபதாம் நூற்றாண்டில் உலகில் வேறெந்த இனத்திலும் நிகழ்ந்திருக்காது. நூல்களை, நூலகங்களைத் தீயிட்டுக் கொளுத்தினால் தான் அழிப்பா? இன்று இருக்கின்ற நூல்களை, நூலகங்களைப் பயன்படுத்தாமல், பராமரிப்புச் செய்யாமல் இருப்பதும், நூலக அமைவிடங்களைப் பற்றி அறியாமல் இருப்பதும் ஒருவகையில் அழிப்புத் தானே! தமிழகத்தைப் பொறுத்தவரையில் நூலகங்களைப் பற்றிய அடைவுநூல்கள் மிகமிகக் குறைவு என உறுதிபடக் கூறமுடியும். பார்வைக்குக் கிட்டியவரை, தமிழகத்து நூலகங்கள் பற்றி இதுவரை மூன்று தொகுப்புநூல்கள் வெளிவந்துள்ளன. அவை, மறைமலையடிகள் நூல்நிலைய 20-ஆம் ஆண்டு நிறைவுவிழா மலர் (4.11.1979 – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்) சென்னை நூலகங்கள் (2009 – பாரதி புத்தகாலயம், சென்னை) தென்னக நூலகங்கள் (2013 – காவ்யா பதிப்பகம், சென்னை) [கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ‘புதிய புத்தகம் பேசுது’ மாத இதழானது ‘புத்தகம் சூழ்ந்த வீடு’ எனும் பெயரில் இல்லநூலகம் அமைத்திருப்போரின் தன்அனுபவத்தைக் குறுங்கட்டுரையாக வெளியிட்டு வந்தமை குறிப்பிடத்தக்க நிகழ்வாகும்]. அவ்வகையில், இந்நன்முயற்சிகளை அடியொற்றி ‘இனம்’...

Read More

கணிப்பொறியும், மொழி பயிற்றுதலும் – ஒரு கண்ணோட்டம்

முன்னுரை இன்று மனித வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் அறிவியல் தவிர்க்க இயலாதபடி ஒன்றிவிட்டது. அறிவியலின் பல்வேறு கண்டுபிடிப்புகளும் மனித சமூகத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அவை வகுத்தளிக்கும் கருத்துக்களால் மானுட உலக மென்மேலும் செலுமையுற்று வருகிறது. 20–ஆம் நூற்றாண்டின் தொடக்கம் அறிவியல் தொழில் நுட்பத்தின் அமோக சாதனைகளைக் கண்டது. அவ்வகையில் கணிப்பொறி முதன்மை கொண்டது. கணிப்பொறியின் நுண்மாண் நுழைபுலத்தால் தொழில்நுட்பம், பொருளாதாரம், மருத்துவம் மேலும் கல்வித்துறையும் வளமுற்று வருகின்றன. மேலை நாடுகளில் குறிப்பாய் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கணிப்பொறி கல்வித்துறையில் பெரும் பங்கினைப் பெற்றுவிட்டது. அங்கெல்லாம் மொழி, மொழியியல் துறைகளிலும், மொழி பயிற்றுதலிலும் கணிப்பொறி கால்கொண்டு மிகச் சிறப்பாய் உதவுவதாகச் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. சமூகத்துடன் தொடர்பு கொண்ட அறிவின் பல்வேறு துறைகளிலும் நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ள கருவி என்ற வகையில் கணிப்பொறி பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகிறது. மொழிபயிற்றுதலில் கணிப்பொறி மொழி பயிற்றுதல் துறையில் இன்று தொழில்நுட்பக் கருவிகள் பெரிதும் இடம் பிடித்துக் கொண்டன. இரண்டாம் மொழி பயிற்றுதலில் மொழிப்பயிற்சிக் கூடம் சிறப்பு வாய்ந்த இடத்தைப் பெற்றிருக்கிறது. மொழிப்பயிற்சிக் கூடம் மிகுந்த பயனுள்ளதாய்த் திகழ்வதாக ஆய்வுகள் புலப்படுத்துகின்றன. தொழில்நுட்ப அறிவியில் நல்கும் புத்தறிவின் மூலம் வளமூட்டப் புதிய துணையாய்க் கணிப்பொறி வந்துள்ளது. 20–ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே கணிப்பொறி கல்வித்துறையில் பயன்பட்டு வந்தாலும், அன்றிலிருந்து செய்யப்பட்ட ஆய்வுகளும், பயன்களும் இன்றுதான் வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளன. மொழியியலைப் பொறுத்தமட்டில் கணிப்பொறி முதன் முதலில் இயந்திரக் கணிப்பொறி மொழிபெயர்ப்புப் (MACHINE TRANSLATION) பயன்படுத்தப்பட்டதாம். அது அப்போது அவ்வளவாக வெற்றி பெறாவிட்டாலும், மொழியியலில் மற்ற துறைகளுக்குக் கணிப்பொறியைப் பயன்படுத்தும் நோக்கிற்கு அது ஊறுசெய்யவில்லை. அதன்பின் பல ஆய்வுகளுக்குக் கணிப்பொறியின் வளர்ச்சி பெற்ற நிலைகள் பெரிதும் துணை செய்தன. பல்வேறு ஆய்வுகளுக்குப் பின்னரே கணிப்பொறி மொழி பயிற்றுதல் துறையில் புகுந்தது. The idea of mechanizing the analysis of Language teaching Methods was first enunciated by Mackey in 1956. Somewhat earlier the principles of Language teaching method analysis has been for nucleated. But it was not until Mepham (1973) under took...

Read More

ஏரெழுபது : உள்ளும் புறமும்

‘இலக்கியம் காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி’ என வருணிக்கப்படுவதுண்டு. கண்ணாடி, எந்தக் கோணத்திலிருந்து பிடிக்கப்படுகிறதோ அதற்கு ஏற்பவே பிம்பத்தைக் காட்டும். மேலும், கண்ணாடியால் எல்லாவற்றையும் பிரதிபலிக்க முடியாது. சான்றாக, ஓர் இடத்தில் நிலவும் தட்பவெட்ப நிலையைக் கண்ணாடியால் துல்லியமாகக் காட்ட முடியாது.  அது போலத்தான் இலக்கியமும். அதாவது எந்த நோக்குநிலையில் இருந்து செய்யப்படுகிறதோ அந்தச் சார்பியல்பைக் பெற்றுத்தான் இலக்கியம் உரு கொள்கிறது. தாம் தோன்றிய கால கட்டத்தின் ஒட்டுமொத்த நடைமுறைகளையும் இலக்கியங்கள் வெளிப்படையாக எடுத்துரைத்து விடுவதில்லை. சில செய்திகளை இலக்கியங்கள் பூடகமாகப் பேசுகின்றன; சிலவற்றைப் பற்றிப் பேசாமல் மௌனம் காக்கின்றன; சிலவற்றைத் திரித்து வேறுபடுத்திக் கூறுகின்றன.ஆக,ஓர் இலக்கியத்தின் நுவல்பொருளை அது தோன்றிய காலச் சூழலோடு ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய தேவை அறியலாகிறது.அதனடிப்படையில் இங்கு ஏரெழுபது என்னும் நூல் ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது. 1.0 ஏரெழுபது – அறுபத்தொன்பது – எழுபத்தொன்பது ஏரெழுபதின் ஆசிரியராகக் கம்பர் சுட்டப்படுகின்றார். இவர் இராமாயணத்தை எழுதிய கம்பரினும் வேறானவர்; பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் என மு.அருணாசலம் (1909-1992) குறிப்பிடுகின்றார் (2005:தொகுதி–6,287). ஏரெழுபது என்னும் நூற்பெயரிலேயே பாடல் எண்ணிக்கை இடம்பெற்றுள்ளது. நூலின் தொடக்கமான கணபதி வணக்கப் பாடலுள்ளும்,கருவி எழுபதும் உரைக்க (ஏர்.பாயிரம் 1:1) என்னும் குறிப்புக் காணப்படுகின்றது. ஆனால்,நூலின் அமைப்பைப் பார்க்கும்பொழுது முகப்புப்பகுதியில் பத்துப்பாடல்கள் இடம்பெற்றுள்ளன.அவை கணபதி வணக்கம், மும்மூர்த்தி வணக்கம், கலைமகள் வணக்கம், சோழமண்டலத்தின் சிறப்பு, சோழ மன்னனின் சிறப்பு, வேளாளர்களின் குடிச்சிறப்பு உள்ளிட்ட செய்திகளை விளம்புகின்றன. அவற்றைத் தொடர்ந்நு உழவுத்தொழிலிற்குரிய கருவிகளும் செய்கைகளும் அறுபத்தொன்பது பாடல்களில் விளக்கப்படுகின்றன. ஆக, நூலின் தரவுகள் மட்டும் அறுபத்தொன்பது (69) பாடல்களாகவும், கடவுள்வணக்கம் முதலான பாயிரப்பகுதியோடு சேர்த்துக் கணக்கிடும்பொழுது எழுபத்தொன்பது (79) பாடல்களாகவும் அமைகின்றன. இவ்வமைப்பு, ஆறுமுக நாவலர் பதிப்புத் தொடங்கிச் சீதை பதிப்பக வெளியீடுவரை காணப்படுகின்றது. இத்தகைய எண்ணிக்கைச் சிக்கல் ஏரெழுபதிற்கு மட்டுமன்று; சிலை எழுபது, ஈட்டி எழுபது போன்ற நூல்களிலும் காணப்படுகின்றது. சிலை எழுபதில் பாயிரப் பாடல்கள் எட்டும்(8), நூலின் பாடல்கள் எழுபத்தொன்றும் (71) உள்ளன. மொத்த எண்ணிக்கை எழுபத்தொன்பதாக (79) அமைகின்றது. ஈட்டி எழுபதில் கடவுள் வாழ்த்து, பாயிரம், நூல் ஆகிய யாவும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக எழுபத்தொரு (71) பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஆக, இந்நூல்களில் பல இடைச்செருகல்கள் உள்ளமை புலனாகிறது. ஏரெழுபதின்...

Read More

தமிழ்க்கணிமை அனுபவங்கள்

அடிப்படையில் நான் ஒரு இயற்பியல் மாணவன், பட்டப்படிப்பு முடித்த கையோடு தகவல்தொழிற்நுட்பச் சேவை நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகச் சேர்ந்தேன். ஆராய்ச்சித் துறையில் ஈடுபாடுயிருந்தாலும் அன்றைய குடும்பச் சூழலால் பணிக்குச் செல்வதைத் தவிர வேறு வாய்ப்பில்லை. பணிக்காரணங்களால் சில நிரல் மொழிகளைக் (Programming Language) கற்று, சிறிய நிரலாக்கத்தைச் செய்துவந்தேன். அங்குதான் இணையம் பரிச்சியமானது. அதுவரை எழுதிவந்த மழலைக் கவிதைகளை இணையத்தில் வெளியிட்டு வந்தேன். அதன்வழி ஒரு வலைப்பதிவனாகவும் மாறிக்கொண்டேன். தொடர்ந்து நகைச்சுவைத் துணுக்குகள் முதல் கதைகள் வரை எழுதிக் கொண்டிருந்தேன். எனது நிரலாக்க அறிவில் தமிழ்ச் சார்ந்த கருவிகள் செய்து இணையத்தில் வெளியிட்டேன். அப்போது ஒருநாள் எனது எழுத்துப் பிழைகளைச் சுட்டிக் காட்டி ஒருவர் பின்னூட்டமிட்டிருந்தார். அதுவொருவகையில் திருப்புமுனையாகவும் கூட அமைந்தது எனலாம். மொழியைக் கணினிக்குக் கற்றுக் கொடுத்து அதனடிப்படையில் பிழைகளைத் திருத்த வேண்டுமென்றால் பல ஆண்டுகளாகலாம். எனவே எனது எழுத்துப்பிழையை நீக்கக் குறுக்குவழிகளில் (தொழில்மொழியில் சாமர்த்தியமாக) ஒரு திருத்தி செய்ய முடியுமா என ஆராயத் தொடங்கினேன். பல்வேறு யுக்திகளைப் பயன்படுத்தி ஒரு சொல்லுக்கும் மற்றொரு சொல்லுக்கும் இடையில் ஒற்று வருமா என்று கணிக்கத் தொடங்கினேன். தமிழுக்கே உரிய இலக்கணங்கள் சவாலாக இருந்ததால் பல முறை முயன்றும் பலனில்லாததால் இம்முயற்சியை நான்குமுறை கிடப்பில் போட்டேன். இலக்கணங்களைக் கற்கவும், சேகரிக்கவும், பயன்படுத்தவும் தீவிரம் காட்டினேன். தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து எழுதி வந்ததால் பிழைகளைக் கண்டுணர்ந்து அதிகமாகக் கற்க முடிந்தது. ஒரு கட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியாவின் தன்னாட்சியான மொழிநடையில் மாற்றுக் கருத்து ஏற்பட்டு அங்கு எழுதுவதை நிறுத்தினேன். இந்தத் திடீர் ஓய்வு சந்திப்பிழை திருத்தி உருவாக்க மீண்டும் ஒரு வாய்ப்பாக அமைந்தது. இம்முறை மாதிரி சொற்கூறுகள் கொண்டு பிழைகளைத் திருத்தும் ஒரு யுக்தியை முயன்று பார்த்தேன். அது சிறப்பான விளைவுகளைத் தந்தது. ஒரு சொல் என்ன இலக்கணத்தில் வருகிறது என்பதை மற்றொரு மாதிரி மூலம் அதைக் கணித்து அதற்கேற்ப சந்தி இலக்கணத்தைப் போட்டால் அதன் பலன் 90% சரியாகவே இருந்தது. மீதிச் சொற்களைச் சந்தேகச் சொற்களாக அக்கருவி காட்டி விளக்கத்தையும் கொடுக்கும். இணையத்தில் வேறு கருவிகள் இல்லாததால் எனக்காக உருவாக்கிய “நாவி” பிழை திருத்தியைப் பொதுப்பயன்பாட்டிற்கு வெளியிட்டேன். ஒரு முழுமையான பிழைதிருத்தி உருவாக்கும் பயணத்தில் நாவி ஒரு சிறிய...

Read More

நூல் மதிப்புரை நீர்நிலை உருவாக்கத்தில் உடைமைகளும் சாதிகளும் (கல்லல் ஒன்றியம் – சிவகங்கை மாவட்டம்)

மாற்றம் ஒன்றே மாறாதது என்ற வரிக்கேற்ப தமிழ்ச்சமூகம் பல பரிணாமங்களைப்பெற்று வந்துள்ளது அல்லது வருகின்றது. அந்தவகையில் நாடோடிச் சமூகமாகத் தன் வாழ்க்கையை வாழத்தொடங்கிய ஆதிகாலத் தமிழ்ச் சமூகம் படிப்படியாக நிலவுடைமைச் சமூகத்திற்கு உருமாறுகிறது, இந்நிலவுடைமைச் சமூகம் உருமாறுவதற்கு, நீரிடங்களை நோக்கிய மக்களின் புலம் பெயர்வே முக்கியக் காரணமாக அமைகிறது. இப்புலம்பெயர்வு தொல்பழங்காலம் தொட்டு இப்பின்நவீனத்துவ காலம் வரை தன் தேவைகளை ஏதோ ஒருவகையில் பூர்த்திசெய்துகொள்ளவே நிகழ்ந்தேறியுள்ளது எனலாம். நீர்நிலை உருவாக்கத்தில் உடைமைகளும் சாதிகளும் எனும் இந்நூலினை ஐந்து இயல்களாக பகுத்து ஆராய்கின்றார் நூலாசிரியர் முனைவர் ம.லோகேஸ்வரன் நீரிடங்களை மையமிட்ட புலம்பெயர்வு எனும் முதல் இயலில் மனித சமுதாயம் எப்படி உருப்பெற்றது அதாவது குரங்கிலிருந்து மனிதன் எப்படி படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று நாடோடிச் சமூகத்திலிருந்து வேட்டைச் சமூகத்திற்கு மாறினான் பிறகு எவ்வாறு நிலவுடைமைச் சமூகத்திற்கு மாறினான் என்பன பற்றி விளக்குகிறது. இந்நிலவுடைமைச் சமூகத்தின் மூலம் ஆற்றங்கரையின் ஓரங்களில் நிலையான குடியிருப்பினைப் பெற்றதோடு, பயிர்த்தொழிலுக்கு வேண்டிய நீர்ப்பாசன முறைகளையும் எளிதில் கற்றுக்கொண்டான். தன் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திய நீர்நிலைகளை தெய்வநிலைக்குக் கொண்டுசென்றான் என்பதைப் பல அறிஞர்களின் கருத்தாக்கங்கள் கொண்டு நிறுவியுள்ளார். இவ்வியல் நூலின் நுழைவாயிலாக அமைவதோடு வாசகர்களுக்குப் புலம்பெயர்வு குறித்த புரிதலைத் தருகின்றது. சங்க இலக்கியத்தில் நீரிடங்கள் எனும் இரண்டாம் இயலில் தொல்பழங்காலத்திலிருந்தே நீர்நிலைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஓர் இணக்கமான உறவு இருந்துள்ளது. அது வேளாண்மையளவிலே நின்றுவிடாது மக்களின் அன்றாட வாழ்வியலிலும் நீர்நிலைகள் முக்கிய வினையாற்றியுள்ளன. இனக்குழு வாழ்க்கைக்கு முன்னதாகவே தோன்றிய இயற்கை வழிபாடு பிற்காலங்களில் நீர், நெருப்பு, காற்று, நிலம், வான் என்று தனித்தனி நிலைகளில் அவரவர் சூழலுக்கேற்ப வழிபடப்பெற்றுள்ளன என்கிறார் ஆசிரியர். மேலும், நீரிடங்கள் குறித்து பிங்கல நிகண்டு, உரிச்சொல் நிகண்டு, சூடாமணி நிகண்டு, ஆசிரிய நிகண்டு (பக்.11-12) போன்ற நிகண்டுகளில் கொடுக்கப்பெற்றுள்ள விளக்கங்களை எடுத்தாண்டுள்ளவிதம் சிறப்பு. சங்க இலக்கியங்களில் குளம், இலஞ்சி, குண்டு, கயம், சூழி, வாவி (பின்னிணைப்பு – 1  பக்.142 – 148) ஆகிய சொற்கள் நீர்நிலைகளைக் குறிக்க பெரும்பான்மையாக கையாளப்பெற்றுள்ளன என்கிறார். இந்நீர்நிலை தொடர்பாக நிகண்டுகளில் சுட்டப்பெற்றுள்ள பெரும்பான்மையான சொற்கள் இன்று வழக்கில் இல்லை. தென்மாவட்டங்களில் மட்டும் ஒருசில சொற்கள் இன்னும் வழக்கில் உள்ளன அவை குளம், குண்டு...

Read More
  • 1
  • 2

ISSN : 2455-0531

Journal Number : 64244
✅ Approved by UGC, India.

Translate Website