விவேகானந்தரின் ஆளுமை பற்றிய சிந்தனைகள்: ஒரு மெய்யியல் ஆய்வு

The thought of the personality by Viveganandar: A Philosophical Approach

[ Published On: November 10, 2018 ]

சுவாமி விவேகானந்தரின் சிந்தனைகள் ஒரு தனிமனித ஆளுமை எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதற்கான சிறந்த வரையறைகளைப் பாரத தேசத்திற்கு மட்டுமன்றி முழு உலகத்திற்குமாகப் பறைசாற்றி நிற்கின்றன. ஆளுமை குறித்து விளக்கமுற்பட்ட மேலைத்தேய சிந்தனையாளர்கள் ஆளுமை குறித்துப் பல்வேறுபட்ட கருத்தாக்கங்களை வெளிப்படுத்தி நின்றனர். சிக்மண்ட் புறொய்ட் பாலியல் உந்தல்களையும், காள் யுங் தொன்மங்களையும், எரிக் எரிக்சன் சமூகத்தினையும் ஒருவரது ஆளுமையினைத் தீர்மானிக்கின்ற ஊக்கிகளாகக் குறிப்பிடுகின்றனர். சுவாமி விவேகானந்தர் இவை யாவற்றிலும் இருந்து வேறுபட்டு இந்திய மரபிற்கே உரிய தனித்துவமான பாணியில் ஒருவரது ஆளுமையினைத் தீர்மானிப்பது ஆன்மீக பலமே என்பதனை வலியுறுத்தினார். ஒருவரது ஆளுமையைத் தீர்மானிப்பதில் உடல் பலம், உயிர் பலம், மனபலம், அறிவு பலம், ஆன்மீக பலம் எனும் ஐந்து கூறுகள் செல்வாக்குச் செலுத்துவதாகக் குறிப்பிடும் விவேகானந்தர் ஆன்மீக பலமே அனைத்தையும் தீர்மானிப்பதாகக் குறிப்பிடுகின்றார். ஒருவரது உள்ளத்திலே புதைந்து கிடக்கின்ற ஆன்மபலமே ஒருவனை உயர்வடையச் செய்கின்றது. அத்தகைய ஆன்ம பலத்தை இந்திய மக்களுக்கு எடுத்தருளினார்.

ஒவ்வொருவரும் தமது தெய்வீக ஆற்றலையும், இயல்பையும் ஓங்கச் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். மேலும் ஒருவனது சிந்தனைகளும், செயல்களுமே அவனது நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்றன என்பதனை எடுத்துக் காட்டினார். எனவே சிந்தனைகளும், செயல்களும் சரியானதாகவும், தெளிவானதாகவும், வலுவானதாகவும் அமைகின்றபோது ஒரு மனிதன் சிறந்த ஆளுமைமிக்க மனிதனாக உருவாகின்றான் என்பதனை எடுத்துக் காட்டியதோடு, சிறந்த ஆளுமை மிக்க தனிநபர்களின் உருவாக்கம், சிறந்த ஆளுமை மிக்க சமூகத்தினதும், நாட்டினதும் உருவாக்கத்திற்கு வழிவகுக்கும் என்பதனையும் தெளிவாக எடுத்துக்காட்டினார்.இத்தகைய கால வரம்பிற்குட்படாத தீர்க்கதரிசனத்தைக் கொண்ட விவேகானந்தரது ஆளுமை குறித்த சிந்தனைகள் சமகால உலகிலும் மிகவும் தேவைப்பாடுடையனவாய் விளங்குகின்றன. இன்றைய உலகில் ஆளுமை என்பது குறித்து காணப்படுகின்ற தவறான புரிந்து கொள்ளல்களில் இருந்து விடுபட்டு, உண்மையான சிறந்த ஆளுமை குறித்த விழிப்புணர்வினைப் பெற்றுக் கொள்வதற்கு சுவாமி விவேகானந்தரது சிந்தனைகள் வித்திடுகின்றன என்பதனை இவ்வாய்வு வெளிப்படுத்தி நிற்கின்றது.இவ் ஆய்வுக்குரிய தரவுகள் இரண்டாம் நிலைத்தரவுகளில் இருந்து பெற்றுக் கொள்ளப்பட்டதோடு, இவ் ஆய்வானது பகுப்பாய்வு முறையியல், ஒப்பீட்டு முறையியல், விமர்சன முறையியல் என்பவற்றின் துணைகொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

KEYWORDS

ஆளுமை, ஆன்ம பலம், மனபலம், உடல் பலம், அறிவுசார் பலம்.
  • Volume: 4
  • Issue: 15

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline