வெளிநாட்டு நேரடி முதலீட்டின் (Foreign Direct Investment – FDI) முக்கியத்துவம் அதிகரித்து வருகின்றமையானது பொருளாதார உலகமயமாதலின் அவதானிக்கக் கூடிய முக்கிய அம்சமாக காணப்படுகின்றது. பெரும்பாலான நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடானது தேசிய அபிவிருத்திக்கான உபாயங்களில் ஒன்றாக இருந்து வருகின்றது. உள்நாட்டு மூலதனம், உற்பத்தித் திறன் மற்றும் வேலைவாய்ப்பு என்பனவற்றினை முன்னேற்றுவதனூடாக விரைவான பொருளாதார அபிவிருத்திக்கான முக்கிய கருவியாக வெளிநாட்டு நேரடி முதலீடு கருதப்படுகின்றது.
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடானது மூலதன பாய்ச்சலின் பிரதான கூறாகவும், தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான ஒரு வாயிலாகவும் கருதப்படுவதனால் வெளிநாட்டு நேரடி முதலீட்டின் நிர்ணயிப்புக்கள் மீது இந்த நாடுகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. ஆகையால் இதுகுறித்து ஒவ்வொரு நாடும் அதிக கவனம் செலுத்த வேண்டியது முக்கியமானதாகும். மேலும் வெளிநாட்டு நேரடி முதலீடு தொடர்பான வரலாற்றுப் பின்னணி, கொள்கைகள் மற்றும் போக்குகள் என்பவற்றை ஆராய்வதன் ஊடாக அதன் மூலம் ஏற்படுத்தப்படும் நன்மை, தீமைகளைத் தெளிவாக வரையறை செய்யக்கூடியதாக இருக்கும்.
வெளிநாட்டு நேரடி முதலீடு என்பதனை வரைவிலக்கணரீதியாக நோக்குவோமாயின் வெளிநாட்டு முதலீடு என்பதனை வெளிநாட்டு நேரடி முதலீடு, வெளிநாட்டு நிதி சார் முதலீடு என இரண்டு வகைப்படுத்த முடியும். வெளிநாட்டு நேரடி முதலீடானது ஒரு நாட்டில் பிறிதொரு நாட்டினது தனியார் அல்லது பல்தேசிய கம்பனிகள் இலாப நோக்கம் கருதி மேற்கொள்ளும் வெளிநாட்டு தனியார் அல்லது பல்தேசியக் கம்பனிகள் நிதி, முகாமைத்துவம், தொழில்நுட்பம், மற்றும் ஏனைய வளங்களை மாற்றீடு செய்கின்றன. பில்லிங்டன் (Billington) என்பவர் உயர்ந்தளவான சந்தைப்பருமன் உயர்ந்தமட்ட வெளிநாட்டு நேரடி முதலீட்டு உட்பாய்ச்சலாக துணைபுரிவதாக குறிப்பிடுகின்றார்.