காவிரிப் பூம்பட்டினத்துப் பொன் வணிகனார் மகனார் நப்பூதனார் எழுதிய முல்லைப்பாட்டு எவர் மீது பாடப்பட்டது என்பது அறியப்படவில்லை. ஆயினும், இவ்விலக்கியத்துள் ஆயர் சமூகப் பண்பாட்டுப் பதிவுகள், முல்லை நிலத்தலைவன் தலைவியரின் வாழ்வியல், போர்க்களத்தின் தன்மை, போர்ப் பாசறை அமைப்பு, பாதுகாவலர்களின் தன்மைகள், அரசு அமைப்புகளின் சட்ட விதிமுறைகள், அதிகார உறவுகள், பாதுகாக்கும் முறைமைகள், சுற்றுச்சூழலின் தன்மைகள், கால நிலைகளின் தேவை, புவிச்சூழல் முதலான பல இனவியல்சார் தரவுகளுக்கு இடமளித்து, இது ஓர் இனவரைவியல் இலக்கியமாகத் திகழ்கிறது. “இலக்கியம் பண்பாட்டின் ஒரு பகுதியாகத் திகழும் போது, அப்பண்பாடு பற்றிய இனவரைவியலுக்கான ஆதாரங்களில் ஒன்றாக அவ்விலக்கியமும் அமைந்துவிடுகிறது” (ஆ.தனஞ்செயன், விளிம்பு நில மக்கள் வழக்காறுகள், ப.12) என்பர். அந்தவகையில் முல்லைப்பாட்டு இலக்கியமும் ஆயர் இன மக்களின் வாழ்க்கைமுறைகளை விளக்குவதாக அமைவதோடு திணைசார் பெண்டிரின் இருப்பு நிலையையும் புலப்படுத்துகின்றது. குறிப்பாக, ஆயரின் அகவாழ்வாகிய முல்லைநில ஒழுகலாறுகளும், புறவாழ்வாகிய வேந்துவிடு தொழிலையும் உணர்த்தி அந்நிலம் சார்ந்த இனவரைவியல் பதிவாக வெளிப்பட்டுள்ளது. இதனுள் அகம்சார் பண்பாடுகள் இங்கு விளக்கம் பெறுகின்றன.