உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப.. நரை முடித்துச்
சொல்லால் முறை செய்தான் சோழன் – குலவிச்சை
கல்லாமல் பாகம் படும்’’ (பழமொழி நானூறு:6)
எனும் பாடலில், கல்லாமலேயே தலைமுறை தலைமுறையாக அறிவு ஒருவருக்கு வந்து சேரும் எனும் கருத்தை முன்றுரையரையனார் முன் வைக்கின்றார்.
மேற்சுட்டிய பாடலடியின் கருத்து சதாவதானம் சரவணப் பெருமாள் கவி ராயருக்குப் பொருந்தும். இவரது குடும்பத்தினர் கவிபாடுவதில் புலமை யுடையவர்கள் இவரது தாத்தா அட்டா வதானம் சரவணப்பெருமாள் கவியார், இவரது தந்தையார் அருணாச்சலக் கவிராயர். இத்தகு புலமைமிக்க குடும்பத்தில் பிறந்த சதாவதானம் சரவணப்பெருமாள் கவிராயரின் கவிப்புலமை குறித்து விளக்குவதாக இக்கட்டுரை அமைகின்றது. இனிவரும் பகுதியில் புலவரின் பெயர் சுருக்கமாய் ‘சரவணார்’ எனத் தாங்கி நிற்கும்.