மொழியின் சிறப்பை விளக்கும் கடப்பாடுடையோருள் புலவர்களுக்குத் தனிப் பங்குண்டு. அவ்வகைப் புலவர்களைத் தத்தெடுத்து செந்தமிழ் வளர்த்ததில் சேதுநாட்டின் (இராமநாதபுரம் மாவட்டம்) பங்களிப்பு அளப்பரியது. சொந்தமண்ணில் பிறந்த புலவர்களை மட்டுமின்றி, தன்னைத் தேடி வந்த புலவர் பெருமான்களையும் ஆதரித்து, அவர்களது திறமையறிந்து பரிசளித்ததில் முதன்மைபெற்ற மண் எனினும் அது மிகையாகாது. தமிழகத்தின் தென்கோடியில் அமைந்திருக்கும் இராமநாதபுரம் அருகே முதுகுளத்தூர் எனும் ஊர் பல்வேறு புலவர்பெருமக்களை ஈன்றெடுத்துள்ளது. விளம்பரமயமான இற்றைக் காலத்தில் படைப்பாளன் தன்னை அடையாளப்படுத்தா விட்டாலும், வாசகன் எனக்குப் பிடித்த படைப்பாளன் எனும் நிலையில் படைப்பை முகநூல், கட்செவி, காணொலி வாயிலாகப் பதிவேற்றம் செய்து உலகறியச் செய்கின்றான். இது சமகால பாணியாகப் படையெடுத்துள்ளது. இதில் படைப்பின் சாராம்சத்தைவிடப் படைப்பாளனின் அறிமுகம் அனைவராலும் நோக்கப்படுகின்றது. இவ்வாறு சிலரறிந்த படைப்பாளனைப் பலரறிய ஊடகங்கள் இன்று வழிவகை செய்கிறது. பிறருடைய பார்வையில் இது விளம்பரமாக இருந்தாலும் எதிர்வரும் சந்ததியினருக்குச் சேமித்து வைத்திருக்கும் வரலாற்றுப் பெட்டகம் இது என இயம்பலாம்.
பெரும்பாலும் முந்தைய காலத்தில் வாழ்ந்த புலவர்கள் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வது அரிது. சமகாலத்தில் வாழ்ந்த புலவர்கள் அறிமுகம் செய்தாலொழிய மட்டுமே அறிய முடியும். இல்லையெனில் மன்னர்கள் பரிசளித்தலின்போது அடையாளச் சின்னங்களாக அவதரிக்கும் கல்வெட்டு, செப்பேடு, சுவடி வாயிலாகவும் அறியக்கூடும். அவ்வாறு அறிமுகம் செய்தாலும் அவர்கள் இயற்றிய பாக்கள் முழுவதும் இடம்பெறுவதில்லை.