ச.தமிழ்ச்செல்வன் தமிழ்ச் சிறுகதையாளர்களில் குறிப்பிடத்தக்கவர். பண்பாட்டுப் போராளி. மிகச்சிறந்த கட்டுரையாளர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளராகப் பணியாற்றியவர். தற்போது அவ்வமைப்பின் மாநிலத் தலைவர். அறிவொளி இயக்கத்தில் நீண்டகாலம் பங்களிப்பைச் செய்தவர். மாற்றுக் கல்விக்கான பல்வேறு செயல்பாடுகளில் தொடர்ச்சியாகத் தம்மை ஈடுபடுத்திக் கொண்டவர். குழந்தைகளுக்கான இலக்கியம் படைப்பதிலும், பெண்ணுரிமைக்காகக் குரல் கொடுப்பதிலும் எழுதுவதிலும் முதன்மை இடம் தந்து படைப்பினைப் படைத்துள்ளார்.
சமுதாயத்தில் பல பிரச்சினைகள் இருந்தாலும் முக்கியப் பிரச்சினையாக விளங்குவது வறுமையாகும். இத்தகைய வறுமையைப் போக்க பல திட்டங்கள் தீட்டப்பட்ட நிலையிலும் இன்னும் இப்பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. இப்பிரச்சினையை முன்வைத்து பல படைப்புகள் வந்துள்ளன. அப்படைப்புகளுள் ஒன்றாகத் தமிழ்ச்செல்வனின் மீடியம் என்னும் சிறுகதையும் விளங்குவது சிறப்புக்குரியது. இச்சிறுகதைக்கண் உள்ள வறுமைப்புனைவு குறித்து ஆராய்வதாக இக்கட்டுரை அமைகிறது.