நீண்ட நெடுங்காலமாகப் பனை ஓலை எழுதுபொருளாகப் பயன்பட்டு வந்தது. எழுத்தாணி கொண்டு ஓலையில் கீறினர். பண்டை இலக்கியங்கள் எல்லாமே ஓலையிலிருந்து பிரதி செய்த வகையில் கிடைத்தவைகளே ஆம். அவ்வப்போது பல ஒப்பந்தங்கள் கல்லிலும் செம்பிலும் வெட்டப்பட்டன. ஊர் மக்கள் படித்துப் பயன்பெறும் பொது இடங்களில் அவை இருந்தன.
கால மாற்றங்களால் இன்று பனை ஓலையின் பயன்பாடு அருகிவிட்டது. இளைய தலைமுறை எழுத்தாணியைக் கண்டதில்லை. காகிதம், பேனா, தட்டச்சுப்பொறி, அச்சுப்பொறி, மோனா டைப், லைனோ டைப், எலக்ட்ரோ டைப், டெலிபிரிண்டர், கம்ப்யூட்டர், பிராட்மா பிரஸ் முதலான தற்கால சாதனங்களில் சிலவற்றை உயர் பதவிகளில் உள்ளவர்கள் கூடக் கேட்டதில்லை. ஆனால் அவற்றின் விளைவுகள் எங்கும் பரவியுள்ளன. பொதுமக்கள் அன்றாடம் துய்க்கும் வகையில் இடம் பிடித்துள்ளன.