பசியின் கொடுமையால் துன்புற்று, வறுமையை எண்ணி வருந்தி வாழும் பாணரையோ, கூத்தரையோ நோக்கி, இம்மன்னனிடம் சென்றால் வறுமை வற்றி, பசி பறந்தோடும் என மன்னனிடம் பரிசில் பெற்று வரும் பாணரோ, கூத்தரோ வழிப்படுத்துவதாக அமைத்துப் பாடுவதே “ஆற்றுப்படையின் இலக்கணம்” ஆகும். அவ்வாறு திருவெஃகா என்றழைக்கப்படும் காஞ்சிபுரத்தை ஆட்சி புரிந்த தொண்டைமான் இளந்திரையனிடத்தே, பேரியாழையுடைய பாணரை ஆற்றுப்படுத்துவதாகக் கடியலூர் உருத்திரங் கண்ணனார் 500 அடிகளால் பெரும்பாணாற்றுப்படை பாடியுள்ளார். இந்நூலில், இடம்பெற்றுள்ள ஐவகைத் திணைகளில் வாழ்ந்த மக்களான முல்லை (ஆயர், ஆய்ச்சியர்), குறிஞ்சி (குறவன், குறத்தியர்), மருதம் (உழவர், உழத்தியர்), நெய்தல் (நுளையர், நுளைச்சியர்), பாலை (எயினர், எயிற்றியர்) ஆகியோரின் உணவுப் பொருட்களும், உணவு முறைகளும் ஆய்வுக்குள்ளாகின்றன.