இலக்கண மற்றும் இலக்கிய உரையாசிரியர்கள் போல வைணவ உரையாசிரியர் பெரியவாச்சான்பிள்ளையும் ஈடு இணையற்றவராகத் திகழ்கின்றார். இவர் தன்னுடை உரையில் ஒரு கருத்தினை ஆழப்பதிய வைப்பதற்காகச் சொல்நயம், பொருள் நயம், மேற்கோள்களைக் கையாளுதல், உவமையைப் பயன்படுத்துதல், சிற்றிலக்கிய வகைமைகளைப் போற்றுதல், புராணக் கூறுகளை இடையிடையே புகுத்துதல் போன்ற எண்ணிறந்த உத்திகளைப் பயன்படுத்தியுள்ளார். அவற்றில் வினா அமைப்பும் ஒன்று. தன் உரை விளக்கத்திற்கு மேலும் மெருகேற்ற வேண்டும் என்ற நோக்கில் வினா அமைப்பினைக் கையாண்டுள்ளார். அவர் கையாண்டுள்ள அவ்வினா அமைப்புமுறையின் நெறிமுறைகளை விளக்குவதே இவ்வாய்வுக் கட்டுரையாகும்.