சங்க இலக்கிய அகப்பாடல்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சொல்லோவியம். சங்கச் சான்றோர்கள் நூலறிவோடு பட்டறிவும் நிரம்பியவர்கள். அவர்களுக்கு முதற்பொருளாகிய குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகிய ஐவகை நிலத்தின் தன்மையும், பெரும் பொழுதுகளான கார், கூதிர், முன்பனி, பின்பனி, இளவேனில், முதுவேனில் சிறும்பொழுதுகளான வைகறை, விடியல், நண்பகல், மாலை, எற்பாடு, யாமம் ஆகியவற்றைக் குறித்தும் நன்கு தெரியும். ஒவ்வொரு நிலத்தில் இருக்கும் மரங்கள், பறவைகள், விலங்குகள் ஆகிய கருப்பொருள் குறித்தும் முழுமையான அறிவு அவர்களுக்கு உண்டு.
இத்தகைய தகுதிகள் பெற்ற சங்கச் சான்றோர்களுள் ஒருவர் கபிலர். அவர் குறிஞ்சித் திணை பாடுவதில் வல்லவர். கபிலர் மரம், விலங்கு பற்றிக் கூறியுள்ள செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவன. அவர் கோங்க மரத்தைத் ‘தண்கோங்கு’ என்று குறித்துள்ளார். இன்றும், மூன்று இழைப்புகளுக்குப் பின் நீர்கோத்துக் கொண்டு மரச் செதில்கள் வருவதைக் காணலாம். அப்புலவர்பெருந்தகை புலியைக் குறித்துக் குறிஞ்சிக் கலியில் சில இடங்களில் தெரிவித்துள்ளார். குறிஞ்சி நிலத்தில் வாழும் புலியும் யானையும் ஒன்றோடு ஒன்று பகையானவை. அடிக்கடி தமக்குள் மோதிக் கொள்வன. கபிலர் காட்டும் கலித்தொகைக் காட்சிகளில் யானையே வெற்றி பெற்றுள்ளது.