பண்டைத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புலவா்கள் பலரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பு சங்கப் பாடல்கள். “ஏறத்தாழ கி.மு. 200 முதல் கி.பி.250 வரை”1 என்ற கால இடைவெளியில் பாடப்பட்ட அப்பாடல்கள் திணை, பாவகை, அடிவரையறை போன்ற பண்புகளின் அடிப்படையில் பகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. புறநானூறு முதலிய எட்டுத் தனித்தனிப் பாடல்களின் தொகுப்பிற்குத் தொகை – எட்டுத்தொகை என்றும் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு மாறான தனித்தனிப் பண்புகள் கொண்ட (அகம், புறம், ஆற்றுப்படை) பாடல்களுக்குப் பாட்டு – பத்துப்பாட்டு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் பாடப்பட்ட பாடல்களில் (எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு) புறநானூறு முதலிய எட்டுப் பாடல்களைக் கொண்ட தொகுப்பிற்குத் (தொகுக்கப்பட்டதால்) தொகை- எட்டுத்தொகை (எண்ணிக்கையில் எட்டு என்பதால்) என்று காரணத்துடன் பெயரிடப்பட்டுள்ளது. ஆனால் திருமுருகாற்றுப்படை முதலிய பத்துப் பாடல்களைக் கொண்ட தொகுப்பிற்குப் பாட்டு – பத்துப்பாட்டு என்று பெயர் வைக்கக் காரணம் என்ன? ‘பத்துப்பாட்டு’ என்பதில் வரும் ‘பாட்டு’ என்பதன் பொருள் யாது? அது காரணப்பெயரா? என்பவற்றிற்கான விளக்கங்களை அறிய முயல்கின்றது இக்கட்டுரை.