கல்வி நிலையில் மிக உச்சமான ஆராய்ச்சிப் படிப்பு பிஎச்.டி. ஆகும். ஒரு நாட்டு மக்களின் கல்வித் தரத்தை அளவிட மிக முதன்மையான கருவி இப்பட்டமாகும். இப்பட்டத்தை ஒருவர் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றுத் தொடர்ந்து கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இடம்பெற்று, பொதுக்கல்வியாக இருந்தால் மூன்றாண்டுகளிலும் தொழிற்கல்வியாக இருந்தால் நான்காண்டுகளிலும் இளநிலைப் பட்டம் பெற்றுத் தொடர்ந்து அதே பாடத்தில் இரண்டாண்டுகள் அல்லது மூன்று ஆண்டுகள் படித்து எம்.ஏ., எம்.எஸ்சி., எம்.காம்., எம்.டி., எம்.எஸ்., முதலான தகுதியை அடைந்தவரே பிஎச்.டி. பட்டத்திற்குச் சேரமுடியும் என்பது பொதுவிதி. பிஎச்.டி., பட்டத்தில் முழுநேர ஆய்வாளராகச் சேர்வதற்கு முன்பு, ஒருவர் பதினேழு முதல் பதினெட்டு ஆண்டுகள் படித்திருக்க வேண்டும். பிஎச்.டி., ஆய்விற்கு முன்பு எம்.ஃபில் என்ற இளநிலை ஆராய்ச்சிப் பட்டமும் இருக்கிறது. தொடர்ந்து பிஎச்.டி. பட்டம் பெறுவதற்காகக் குறைந்தது மூன்றாண்டுகள் முழுநேர ஆய்வாளராக ஒரு பல்கலைக்கழகத்தில் அல்லது பல்கலைக்கழக ஒப்புதல் பெற்ற முதுநிலைப் பட்டமும் ஆராய்ச்சியும் நிகழ்த்தும் கல்வி நிறுவனத்தில் ஒருவர் சேரலாம். சேருபவர் முன்பே எம்.ஃபில் பட்டம் பெற்றிருந்தால் அவர் மூன்றாண்டுக்குப் பதிலாக இரண்டாண்டுகள் முழுநேர ஆராய்ச்சியாளராக இருத்தல் வேண்டும். பெரும்பாலும் இந்த அடிப்படை நெறிகளில் 1970 வரை மிகக்கண்டிப்புக் காட்டப்பட்டது. எனவே, அக்காலங்களில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர்கள் நல்ல தகுதியுடையவர்களாக இருந்தனர். பலவேறு அடிப்படை ஆராய்ச்சிகளை நிகழ்த்தினர். இந்தியாவிலும் அயல்நாடுகளிலும் உயர்நிலை வேலை பெற்றதுடன் ஆராய்ச்சி நிறுவனங்களில் தலைமைப் பொறுப்பையும் சிலர் எய்தினர். அவர்கள் வழங்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் மிகத் தரமுடையனவாக இருந்தன. அவர்களது படைப்புகள் கல்வியாளர்களுக்கும் மக்களுக்கும் தொடர் ஆராய்ச்சிக்கும் மிகுந்த பயனுடையனவாக இருந்தன.