பண்டைத் தமிழர்களின் வரலாறு தொடர் பான ஆய்வுகள் பல பரிமாணங்களில் கடந்த இருநூறு ஆண்டுகளுக்கும் மேலாக வெளிவந்த வண்ணம் உள்ளன. சென்ற நூறாண்டுக்கு முன்னர் தமிழ கத்தில் பெரிய களஆய்வோ, தொல்லியல் அகழாய்வோ இல்லாமல் சங்க இலக்கி யங்களை முதன்மைச் சான்று களாகக் கொண்டு ஆய்வு செய்துவந்த நிலையில், சங்கப் பாடல்கள் உணர்ச்சிக் குவியல் களாகவும், வீரநிலைக் கதைப்பாடல் களாகவும் பேசப்பட்டு வந்தன. 1876ஆம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிச்சநல்லூரில் ஜாகர் என்பார் அகழ்வாய்வை மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து 1903இல் எம்.லோனிசு லாபி அகழாய்வு செய்தார். 1899-1906இல் அலெக்ஸாண்டர் ரீ ஒரு விரிவான அகழாய்வை மேற்கொண்டதன் மூலம் இலக்கியங்கள் குறிப்பிடும் செய்திகள், பண்டைத் தமிழரின் நாகரீகங்கள் ஆகியவற்றைத் தொல்லியல் சான்றுகளுடன் நிரூபிக்க முடிந்தன. அதன் பின்னர்த் தமிழகத்தில் அரிக்கமேடு, காவேரிப் பூம்பட்டினம், அழகன்குளம், கொற்கை, கொடுமணல், கரூர், பொருந்தல், கீழடி மற்றும் கேரளத்தில் பட்டனம் போன்ற இடங்களில் நடைபெற்ற தொல்லியல் அகழாய்வுகள் குறிப்பிடத்தக்கவையாகும்.
இக்கட்டுரை இதுவரை தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வையும் சங்க இலக்கியம் குறிப்பிடும் பண்டைத் தமிழர்களின் அணிகலன்ளையும் ஒப்பிட்டுத் தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில் விளக்க முற்படுகிறது.