சைவ சமய சாத்திர நூல்களுக்கெல்லாம் மூலமாகவும், முதன்மையானதாகவும் விளங்குவது திருமந்திரம். திருமுறைகளின் வரிசையில் பத்தாம் திருமுறையாக இடம்பெற்றுள்ள திருமந்திரத்தை இயற்றியவர் திருமூலர். இவர் பாடிய மூவாயிரம் பாடல்களுள் நூற்று அறுபத்திரண்டு பாடல்கள் தம்மை உளப்படுத்துவதாக அமைந்துள்ளன. இதன் வாயிலாக, திருமூலரின் வரலாற்றை ஓரளவு அறிய இயலுகிறது. இந்நோக்கத்தோடு அவர் பற்றிய தேடலைத் தொடங்கினால், ‘வாழ்வாங்கு வாழ்ந்த வாழ்க்கைக்குரிய ஒரு தத்துவஞானி திருமூலர்’ என்பது புலப்படும். அந்தவகையில், மனித அறிவின் எல்லைக்கு அப்பால் நின்று தனிமனித ஒழுக்கங்களை வலியுறுத்தி, வழிகாட்டும் திருமந்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஈதல்’ எனும் திருமூலரின் தத்துவத்தை ஆய்ந்து தெளிவதை இக்கட்டுரை நோக்கமாகக் கொண்டுள்ளது.