“மெய்யியல்” என்பது உண்மை பற்றிய தேடலாகும். இம்மெய்யியலானது ஆய்வு செய்யும் விடயங்களின் இயல்புகள், நோக்கங்களின் அடிப்படையில் நான்கு பிரதான பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை பௌதீகவதீதம், அறிவாராய்ச்சியியல், ஒழுக்கவியல், அழகியல் ஆகியனவாகும். மெய்யியலின் விசேட பிரிவுகளில் ஒன்றாகவே தமிழர் மெய்யியல் அமைந்துள்ளது. தமிழர் மெய்யியல் என்பது மெய்யியலின் பிரதான எண்ணக்கருக்கள் தமிழர்களது வாழ்வியலில் ஏற்படுத்தியுள்ள தாக்கம் தொடர்பாக ஆராயும் ஓர் அணுகுமுறையாகும். மெய்யியலின் பிரதான எண்ணக்கருக்கள் தமிழர்களது வாழ்வியலில் ஊடுருவியுள்ளனவா? அவை எவ்வாறு ஊடுருவியுள்ளன? முதலிய கருத்துக்களை ஆய்வு செய்வதாகவும் தமிழர் மெய்யியல் விளங்குகிறது. அந்தவகையில் மெய்யியலின் பிரதான ஆய்வு விடயங்களான பௌதீகவதீதம், அறிவாராய்ச்சியியல், ஒழுக்கவியல், அழகியல் ஊடாகத் தமிழர்களின் மெய்யியல் சிந்தனைகளை இனம்கண்டு கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.