தமிழம் வலையானது (www.thamizham.net) என்ற வலைப்பக்கத்தின்கீழ் இயங்கிவருகிறது. பொள்ளாச்சியில் உள்ள சூளேஸ்வரன்பட்டியைச் சார்ந்த “நசன்” என்னும் தமிழறிஞர் 2003-ஆம் ஆண்டு இவ்வலைப்பக்கத்தை உருவாக்கித் தொடர்ந்து தற்போதுவரை நிர்வகித்து வருகிறார். இவரது இயற்பெயர் மணிப்பிள்ளை நடேசன்.
தமிழம் வலையில் ஒரே நாளில் 303 திருக்குறள்களை எளிமையாகக் கற்று உணா்வதற்குரிய தனிப்பகுதியொன்றை இவர் உருவாக்கியுள்ளார். அப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு, “மாணவர்களுக்குத் திருக்குறள் பயிற்சி வழங்குவதில் தமிழம் வலை கட்டமைக்கும் கல்வியியல் நெறிகளை ஆராய்வது” இக்கட்டுரையின் மையநோக்கம் ஆகும். “நசன் அவர்களுடனான கைபேசி வழிப்பேட்டி” (நடேசன், 2019) இக்கட்டுரை தொடர்பான பல்வேறு புரிதல்களை வழங்கியது என்பது இங்குக் குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இலக்கியக் கல்வியில், வாழ்வியலோடு ஒன்றி மாணவர்கள் இலக்கியம் கற்காததற்கு மனப்பாட வழிக் கல்வி காரணமாக உள்ளது” என்பது இக்கட்டுரைக்குரிய கருதுகோள் ஆகும்.