ஞானபோதினி இதழில் தமிழியல் ஆய்வுகள்

Tamil Research through Jounals: Gnanapothini (1897-1903)

[ Published On: November 10, 2019 ]

இந்திய வரலாற்றில் 19ஆம் நூற்றாண்டு என்பது மிக முக்கியமான காலமாகும். இந்நூற்றாண்டில் புதிதாக அறிமுகமான ஆங்கிலக் கல்வி முறை, அச்சு முறைமையின் ஊடாகத் தோற்றம் பெற்ற அச்சு ஊடகங்கள், புதிய நிர்வாக அமைப்பு முறைகள் ஆகியன இந்திய சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் மிகப் பெரிய அளவிலான மாற்றங்கள் நிகழ வழிவகுத்தன.

இந்த மாற்றங்களின் வழியாகத்தான் புதிய நோக்கிலான தமிழியல் ஆராய்ச்சியும்  உருப் பெற்றது.  குறிப்பாக இக்காலக்கட்டத்தில் பாரம்பரிய தமிழ்ப் பின்புலமும், நவீன கல்வி முறையின் அறிமுகமும் கிடைக்கப்பெற்ற ஒரு புதிய தலைமுறையினர் தோன்றினர்.  இப்பின்புலத்திலேயே தமிழ்ச் சூழலில் இதழ்கள் தோற்றம் பெற்றன.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சென்னை மாகாணம் என்பது பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கிலப் பத்திரிக்கைகளின் பிறப்பிடமாக விளங்கியது. 1876களில் சென்னையில் மட்டும் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் சுமார் 19 செய்தி இதழ்கள் வெளிவந்துள்ளன.1

செய்தி இதழ்களைத் தவிர சமய நிறுவனங்கள், சமுதாய அமைப்புகள், அரசியல் அமைப்புகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட மனிதர்களால் நூற்றுக்கணக்கான பருவ இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவற்றுள் பல இதழ்கள் தமிழ் இதழியல் வரலாற்று நூல்களில் பதிவு செய்யப்படாமலேயே உள்ளன. காட்டாக 1869 முதல் 1943 வரையான காலக்கட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்பட்ட 38 இதழ்களில்2 ஒரு பைசா தமிழன் போன்ற சில பத்திரிக் கைகள் தவிர மற்ற பத்திரிக்கைகள் பற்றிய குறிப்புகள் பதிவாகாமலேயே உள்ளன. இவற்றுள் சில இதழ்கள் பிரிட்டிஷ் அரசின் ஆதரவோடும் இன்னும் சில இதழ்கள் ஆங்கிலேயர்களாலும் நடத்தப்பட்டுள்ளன.

அவ்வகையில், இக்காலப் பகுதியில் தமிழ் இலக்கியத்தினை முதன்மைப்படுத்திப் பல்வேறு இதழ்கள் வெளிவந்துள்ளன. ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் என ஒன்றிற்கும் மேற்பட்ட மொழி, இலக்கியங்களில் அனுபவம் மிக்க கற்றறிந்தவர்கள் பலர் இவ்விதழ்களில் பங்களிப்புகள் செய்தனர்.

இவர்கள் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு, சமயம், தத்துவம், கல்வி, அறிவியல், அரசியல் எனப் பலதுறைகள் சார்ந்து தங்கள் எண்ணங்களைக் கட்டுரைகளாக, நூல்களாக வெளியிட்டனர். இவற்றிற்குப் பெரிதும் உதவியாகவும் களமாகவும் அமைந்தவை அக்காலத்தில் தோன்றிய இதழ்களே ஆகும்.

1840களில் யாழ்ப்பாணத்திலும், மதுரையிலும் வெளியிடப்பட்ட உதயதாரகை பத்திரிகை தொடங்கி ‘ஞானபாநு“, ‘ஞானபோதினி”, ‘தேசோபகாரி”, ‘ஜநவிநோதினி”, ‘தமிழியன் ஆண்டிகுரி”, ‘சிந்தாந்த தீபிகா”, ‘ஒரு பைசா தமிழன்” இதழ்கள் உட்பட 1920 வரை தமிழ்ச் சூழலில் நூற்றுக்கணக்கான இதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. இவ்விதழ்களுள் பொதுவான செய்திகளோடு, தமிழியல் ஆய்வு சார்ந்தும் பல்வேறு செய்திகள், கட்டுரைகள், விவாதங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இக்காலத்தில் அறிமுகமான நாவல் இலக்கியங்களை மட்டுமே வெளியிடும் இதழ்களும்கூட வெளிவந்துள்ளன.

இதழ்களின் மேற்கண்ட செயல்பாடுகளின் தொடர் விளைவாகத்தான் தமிழ்ச் சூழலில் புதிய நோக்கிலான தமிழியல் ஆய்வுகள் வெளிவரத் தொடங்கின. இவ்வாறான தொடக்க கால இதழ்களின் தமிழியல் ஆய்வுப் போக்குகளை எதிர்கால இளந்தலைமுறையினருக்கு எடுத்துரைப்பதன் மூலமும் அவற்றை மீளாய்வு செய்வதன் மூலமும் தமிழியல் ஆய்வுகளின் எல்லையை நாம் விரிவடையச் செய்ய இயலும்.

KEYWORDS

தமிழியல், ஞானபோதினி, மு.சு. பூர்ணலிங்கம்பிள்ளை, வீ.கோ.சூரியநாராயண சாஸ்திரி, சிலப்பதிகாரவாராய்ச்சி
  • Volume: 5
  • Issue: 19

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline