புதிய கற்காலத்தின் தொடர் வளர்ச்சிதான் பெருங்கற்காலம். தமிழகத்தைப் பொறுத்தமட்டில் இக்காலம் வரலாற்றுக்கு முந்தையகாலப் பகுதியிலிருந்து வரலாற்றுக் காலத்துக்கு மாறும் ஒரு பொற்காலம் என்றே குறிப்பிடுதல் வேண்டும். இன்னும் சொல்லப்போனால் சங்ககாலம் என்று சொல்லுகிறோமே அது இக்காலத்தின் பிற்பகுதிக் காலம்தான். அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றமடைந்துவிட்ட காலம். எழுத்தறிவு பெறப்பட்டுவிட்ட காலம். இலக்கியங்கள் மலர்ச்சியுற்ற காலம். இரும்பின் பயன்பாடு உணரப்பட்டுவிட்ட காலம். செப்புக் கலன்கள், தங்கம், வெள்ளி, அணிகலன்கள், இரும்புக் கருவிகள் ஆகியவை உபயோகத்திலிருந்த காலம். உயர்ந்த தரத்தில் மட்கலங்கள் (Tablewere) உருவாகப்பெற்ற காலம். மண்ணாலும், மணியாலும், தந்தத்தாலும் அணிமணிகள் செய்யப் பெற்ற காலம். பஞ்சாடை தயாரிக்கப்பெற்று உடுத்தப்பட்ட காலம். செப்பு மற்றும் ஈய நாணயங்கள் உருவாக்கப்பெற்றுப் புழக்கத்திலிருந்த காலம் (நடன.காசிநாதன்,2006:29). இத்தகைய பெருங்கற்படைக் காலம் தமிழகத்தில் கி.மு.ஆயிரம் முதல் கி.பி. முதல் நூற்றாண்டுவரை நின்று நிலைத்திருந்தது என்பர் கா.ராஜன்(2010:8).
ஒரு நாட்டின் கலாச்சார, பண்பாட்டு வரலாற்றை எடுத்துரைப்பதில் தொல்லியல் சான்றுகள் முக்கியப் பங்கு வகுக்கின்றன. இத்தொல்லியல் சான்றுகள் இன்றளவில் தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டம் – பட்டறைபெரும்புதூர், விழுப்புரம் மாவட்டம் – ரிஷிவந்தியம், உளுந்தூர்பேட்டை, வடகுறும்பூர், இராமநாதபுரம் மாவட்டம் – முதுகுளத்தூர் அருகே ஆம்பல் வட்டம், பனைக்குளம், தேரிருவேலி, திருநெல்வேலி மாவட்டம் – மானுருக்கு அருகே களக்குடி, சிவகங்கை மாவட்டம் – திருப்புவனம் அருகே கீழடி, தேவகோட்டைக்கு அருகே கண்டரமாணிக்கம், அனுமந்தக்குடி, பொண்ணாங்கண்மாய், ரஸ்தா, காரையூர், காரைக்குடிக்கு அருகே செட்டிநாடு, காளையார்கோவிலுக்கு அருகே வேளாரேந்தல், இளந்தக்கரை, கண்டணிக்கரை, பவளி, கீரனூர், முடிக்கரை, மண்டபம், பாளையேந்தல், நல்லேந்தல், கிராம்புளி, மாராத்தூர் ஆகிய ஊர்களில் அடுத்தடுத்து தொல்லியல் சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, தாயமங்கலத்திற்கு அருகே எட்டிசேரி கிராமத்தில் தொல்லியல் சான்றுகள் கண்டெடுக்கப்பெற்றுள்ளன. கண்டெடுக்கப்பெற்றுள்ள தொல்லியல் தரவுகளே இக்கட்டுரைக்கு முதன்மைச் சான்றாக அமைகின்றன.