“இயற்கையிடமும் மரணத்திற்குப் பின்வரும் நிலையிடமும் மனிதன் கொண்ட அச்சமே வழிபாட்டிற்கு அடிப்படைக் காரணம்” (2010:222) என்று சிக்மண்ட் பிராய்டு கூறுவதை எடுத்துரைப்பார் சு.சக்திவேல். பிராய்டு கூறியது ஆதி சமூகமான வேட்டைச் சமூகத்திற்குப் பொருந்தும். பின்னாளில் நிலவுடைமைச் சமூகத்தில் இயற்கையை மட்டுமல்லாமல் இறைவன் எனும் பெரும் சக்தியும் உண்டு என்று மக்கள் எண்ணியதன் விளைவே இறைவழிபாட்டின் தோற்றம்.
வழிபாடு என்பது அச்சத்தின் காரணமாக நிகழ்வது என்பது பெரும்பான்மை. ஆனால் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் வழிபாடு நடந்தது, நடக்கின்றது. எனவே மக்கள் தங்கள் மனத்தில் உள்ள துயரங்கள் தீர வழிபாடு செய்தும், மன மகிழ்ச்சியின் வெளிப்பாடாக நன்றிக் கடன் செலுத்தும் விழாவாகவும் வழிபாடுகளை நடத்தத் தொடங்கினர். ஒவ்வொரு சமூகத்திற்கேற்றவாறு வழிபாட்டு முறைகள் மாறுபடும் என்பது நடப்பியல் உண்மை.