நாடோடி இனங்களாக வாழ்ந்து கொண்டிருந்த ஆதிவாசிச் சமூகங்கள் நிலையான நீரிடங்களை மையமிட்டுத் தத்தம் புலம்பெயர்வுகளை வரையறுத்துக் கொண்டன எனலாம். ஆய்வாளர்கள் ஒரு வரலாற்றை எழுத அல்லது மறுகட்டமைப்புச் செய்ய முற்படும் பொழுது நதிக்கரையில் அமைந்த தொல்நாகரிகங்களே அகழ்வாராய்ச்சிகளில் மிகுதியான தரவுகளை வழங்கியுள்ளன.
ஓர் இனத்தைப் பண்பாடு மிக்க முதிர்ந்த இனமென்று மொழிவதற்கு அவ்வினத்தின் நீரியல் மேலாண்மையினை முதன்மைக் காரணியாகக் கொள்ள முடியும். இதனடிப்படையில் பாண்டியநாட்டு வேளாண் இனக்குழுக்களின் நீரியல் அறிவினைத் தொல்லெச்சத் தரவுகளோடு நோக்கும்பொழுது இந்தியத் துணைக்கண்டத்தின் தொல் இனக்குழுக்களாக இவர்களை முன்னெடுத்துச் செல்ல முடியும். இலக்கியத் தரவுகளும் தொல்லியல் தரவுகளும் குறிப்பிடுகின்ற பல்வேறு இனக்குழுக்களில் நீரோடும் நீரை மையமிட்ட வேளாண்மையோடும் மிகுந்த தொடர்புடைய தொல் இனங்களாக மள்ளர் [பள்ளர்], மடையர், உழவர், கடைஞர், கடைசியர், கரையர், நீராணிக்கர், நீர்க்கட்டியார், நீர்ப்பாய்ச்சியார், நீர்வெட்டியார், ஆற்றுக் காலாட்டியர், குடும்பர் ஆகியோர் அறியப்படுகின்றனர். பிற்காலங்களில் குளங்களை மட்டும் காத்து வந்தோரைக் குளத்துப் பள்ளர்கள், குளக்காப்பாளர்கள் என்றழைத்தனர். மேற்குறித்த இனங்கள் அனைத்தும் மள்ளர் இனத்தின் கிளை இனங்கள் என்பார் குருசாமி சித்தன். இவ்வினங்களின் பருவகால நீர்மேலாண்மையினையும் வேளாண் நுட்பங்களையும் நோக்கும்பொழுது இவர்கள் யாவரும் தொன்மையான ஒரு வேளாண் சமூக மரபைச் சார்ந்த கிளை இனங்கள் என்ற முடிவுக்கு வரமுடியும். இத்தொல் இனங்களில் மள்ளர், மடையர் குறித்த நேரடியான இலக்கியப் பதிவுகளையும் தொல்லியல் சான்றுகளையும் எடுத்துக் காட்டி வேளாண்மைசார் நீரியல் மேலாண்மையில் இவர்களுக்கிருந்த பங்கினை வரலாற்றுப் பின்புலத்தில் எடுத்துரைப்பதாக இவ்வாய்வுரை அமைகின்றது.