பண்டைக்காலப் புலவர்களின் உணர்வின் வெளிப்பாடுகளை நமக்கு உணர்த்தி நிற்பவை சங்கப் பாடல்கள். ஏறக்குறைய ஐந்நூறு அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகால அளவில் பரந்து விரிந்த தமிழ் நிலப்பரப்பில் புலவர்களின் தன்னுணர்ச்சிப் பாக்களாக உருவான அப்பாடல்கள் பின்னர், அகம் – புறம், திணை – துறை, கூற்று என்று பல நிலைகளில் பகுத்துத் தொகுக்கப்பட்டுள்ளன. புறப்பாடல்களில் கூற்று என்பது புலவர் பெயரால் அமைகிறது. ஆனால் அகப்பாடல்கள் கூற்று என்று வரும்போது தலைவன், தலைவி, தோழி என்று கற்பனைப் பாத்திரத்தின் பொதுப்பெயராக அமைகிறது. இங்குக் கவனிக்கவேண்டிய அம்சம் ஒன்று உண்டு. அது அகப்பாடல் பற்றியது. அதாவது அகப்பாடல்கள் புறப்பாடல்கள்போல் புலவர்களால் பாடப்பட்டிருந்தாலும் பாடலைப் பாடியவராகத் தலைவனோ, தலைவியோ, தோழியோ அல்லது வேறு ஏதோ ஒரு பாத்திரமாகவோ கருதப்படுகிறது. அதாவது பாடலாசிரியன் வேறு – பாடலில் வெளிப்படும் குரல் வேறு என இது அமைகிறது.