இலக்கியம் வாழ்க்கையின் வெளிப்பாடு. மனித மன எண்ணங்களை மனத்தின் செயல்பாடுகளை மையமாகக் கொண்டது. ஒவ்வொரு எழுத்தாளனின் படைப்பும் அவனது அகமன அனுபவங்களின் பிரதிபலிப்பாகும். “மனிதனின் அக வாழ்க்கையே இலக்கியத்தின் கருப்பொருளாகிறது” என்கிறார் (வை.சச்சிதானந்தன், ப.199).
சங்க இலக்கியங்களில் பல்துறை ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன. இவை மனித மனதின் எண்ண ஓட்டங்கள், உளச்சிக்கல்கள் பல்வேறு சூழல்களில் வெளிப்படும் மனித நடத்தை மாறுபாடுகள் போன்றவற்றைச் சித்தரிக்கின்றன.
பிரிவுத்துயரத்தினால் அகமாந்தர் தனிமையில் தன் நெஞ்சிற்குக் கூறும் நிலை நெஞ்சொடு கிளத்தலாகும். நெஞ்சொடு கிளத்தலில், நெஞ்சுக்குக் கூறுபவரின் நனவுமனச் செயல்பாடுகளும், நனவிலி மன உணர்வுகளுமே ஒன்றுக்கொன்று எதிர்கொள்கின்றன.
குறுந்தொகையில் நெஞ்சொடு கிளத்தல் தன்மையில் அமைந்த பாடல்களில் வெளிப்படும் தலைவனின் மனச்செயல்பாடு உளப்பகுப்பாய்வு நோக்கில் இங்கு விளக்கப்படுகிறது.