சங்க காலத்தில் தோன்றிய எட்டுத்தொகை நூல்களையும் பத்துப்பாட்டு நூல்களையும் “பதினெண் மேற்கணக்கு நூல்கள்” என அழைத்தனர். இவை காதலையும் வீரத்தையும் முதன்மையாக எடுத்தியம்பின. மக்களுக்கு அறத்தையும் அறம் தவறுவதால் ஏற்படும் விளைவுகளையும் வலியுறுத்த எழுந்த 18 நூல்களைப் “பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்” என வழங்கினர். இதனை
“நாலடி நான்மணி நானாற்ப தைந்திணைமுப்
பால்கடுகங் கோவை பழமொழி மாமூலம்
இன்னிலைசொல் காஞ்சியோ டேலாதி யென்பதூஉம்
கைந்நிலையு மாங்கீழ்க் கணக்கு.”1
என்ற வாய்மொழிப் பாடல் வழியாக அறிய முடிகிறது. இந்நூல்களில் வெளிப்படும் ஒல்காப் புகழ்த் தொல்காப்பியனார் கூறியுள்ள எண்வகை மெய்ப்பாடுகளுள் ஒன்றான ’இளிவரல்’ என்னும் மெய்ப்பாடு ஆய்வுப் பொருளாகின்றது.