இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் (பீகார், ஒடிஸா, அஸ்ஸாம், மேற்கு வங்காளம்) கி.பி.1050-1200 இடைப்பட்ட காலக்கட்டத்தில் இயற்றப்பெற்ற ஒருவகையான மறைத்தன்மை பொருந்திய பாடல்களே தாந்திரீகப் பாடல்கள் என்று அழைக்கப்பெறுகின்றன. இப்பாடல்களைத் தமிழ் ஆய்வுப்பரப்பிற்கு அறிமுகம் செய்யும் நோக்கம் கொண்டே இக்கட்டுரை எழுதப்பெறுகிறது.
இக்கட்டுரைக்கான முதன்மைத் தரவுகள் இரண்டு ஆகும். அவையாவன: தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட வங்காள இலக்கிய வரலாற்று நூலில் உள்ள ‘பண்டைக்கால வங்காளிக் கவிதையும் மறைஞானமும்’ என்ற கட்டுரையும் தமிழில் மொழிபெயர்க்கப்பெற்றுள்ள இந்த மறைஞானப் பாடல்களும் (கையெழுத்துப் பிரதி வெளியிடப்படாதது) ஆகும். மேலும், இப்பாடல்கள் குறித்து ஆங்கிலத்தில் வெளிவந்திருக்கிற ஆய்வாளருக்குக் கிடைத்த நூல்கள், கட்டுரைகள் ஆகியவற்றைக் கொண்டு இக்கட்டுரை வடிவமைக்கப்பெறுகிறது.