குறித்த ஒரு சமூகம் அல்லது இனம் காலங்காலமாகப் பின்பற்றி வருகின்ற நம்பிக்கை, அறிவு, சட்டம், வழக்காறு முதலியனவும் அச்சமூகத்தில் இருந்து ஒருவன் கற்றுக்கொள்ளுகின்ற இன்ன பிறவும் பண்பாடு எனப்படும். பண்பாட்டின் தலையாய அம்சம்தான் கலையாகும். ஒரு கிராம மக்களது வாழ்வியல் கூறுகளையும், அவர்களது பழக்கவழக்கங்களையும் படம்பிடித்துக் காட்டுவன அவர்களது கிராமியக் கலைகளாகும்.
அதாவது ஒரு நாட்டு மக்களின் நாகரிகம், பண்பாடு, பழக்கவழக்கம், வரலாறு போன்ற நாட்டு நடப்புக்களை உண்மையான முறையில் படம் பிடித்துக் காட்டுவன நாட்டுப்புற மக்களின் மரபு வழிப்பட்ட கலைகள் ஆகும். இவை சமுதாய வளர்ச்சியைக் காட்டும் கண்ணாடி எனலாம்.
நாட்டுப்புறப் பாடல், நாட்டுப்புறக்கதைகள், நாட்டுப்புறக் கதைப்பாடல்கள், நாட்டுப்புறக் கைவினைப் பொருட்கள், நாட்டுப்புற விளையாட்டுக்கள், நாட்டுப்புற மருத்துவம், நாட்டுப்புற நம்பிக்கைகள், பழக்கவழக்கம், சடங்கு, நாட்டுப்புற நடனம் முதலானவை கிராமியக் கலைகளாகும்.
இத்தகைய கிராமியக்கலைகள் இன்று மறைந்துகொண்டே வருகின்றன. காரணம் உலகமயமாக்களின்கீழ் மக்கள் நவீனத்துவத்தை விரும்பிச் செல்கின்றமையால் இக்கலைவடிவங்களை விரும்புகின்றவர்கள் சமூகத்தில் குறைவாகவே காணப்படுகின்றனர். சிறந்த வாழ்வியல் சிந்தனைகளைத் தரும் கிராமியக் கலைவடிவங்களை அவர்கள் மறந்து விடுகின்றனர். இத்தகைய நிலையும் இன்று சமூகத்தில் பாரிய பிரச்சினைகள் எழக் காரணமாக அமைந்துள்ளது என்பதனை விளக்குவதாகவே இந்த ஆய்வுக்கட்டுரை அமைகிறது.