உம்பளாச்சேரி மாட்டினத்தின் பூர்வீகமென்பது காவிரிப் படுகையில் உள்ள நாகப்பட்டினம், திருவாருர், தஞ்சாவூர் மாவட்டங்களேயாகும். இம்மாட்டினம் சதுப்பு நிலங்களில் ஏர் உழுவதற்கு மிகவும் புகழ்பெற்றது. உலகமயமாதலுக்குப் பின் உண்டான எந்திரமயமாக்கப்பட்ட வேளாண்முறைமையால் இந்த எருதுகளின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துள்ளதாக அறிய முடிகிறது (Rajendran, 2008:1). இவ்வின மாடுகளை வளர்ப்பதில் இப்பகுதி உழவர்களிடையே ஒருவித சுணக்கம் ஏற்பட்டுள்ளது (Report, 2012, p.03).
ஆய்வின் நோக்கம்
உம்பளாச்சேரி மாடுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது எனும் கருதுகோளின் அடிப்படையில் ”காவிரிப் படுகையில் உம்பளாச்சேரி எருதுகளின் எண்ணிக்கை பரவல் (Prevalence)” குறித்த கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.