அமிழ்தினும் இனிய தமிழ்மொழியின் தனிச்சிறப்பே அதில் அமைந்துள்ள பொருள் இலக்கணமாகும். அப்பொருளிலக்கணத்தில் இடம்பெறும் அகம், புறம் என்னும் இருதிணைக்கட்டமைப்புக் குறிப்பிடத்தக்கதாகும். இவ்வகவாழ்வுக்கும் புறவாழ்வுக்கும் பொதுவான மெய்ப்பாடுகளுள் ஒன்றான நகை என்னும் மெய்ப்பாடு கலித்தொகையில் எவ்வாறு இடம்பெற்றுள்ளது என்பதைக் காண்பதாக இக்கட்டுரை அமைகின்றது.