அற இலக்கியங்களை வகுப்பறையில் கற்பிக்கும் முன்பாகக் கற்கின்ற மாணவர்கள் எந்நிலையுடையவர்கள் என்பதை அறிந்து, அவர்களது தேவைக்கேற்பக் கற்பித்தல் முறைகளைக் கையாளுவது சிறந்த ஆசிரியரின் கடமையாகும். அவ்வகையில், முதுகலைத் தமிழ் இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு இந்திய இலக்கியங்களைக் கற்பிக்கும் பொருட்டு அவர்களுக்கு ஒப்பீட்டு முறையைக் கையாளுவது சிறந்ததாகும் எனலாம். இவ்வாறு ஒப்பீட்டு முறையை அணுகும்போது மாணவர்கள் அறிந்த மொழியில் தொடங்கி அறியாத மொழிக்கு அவர்களைக் கொண்டு செல்வதின் வாயிலாகக் கூடுதல் மொழியறிவு பற்றிய சிந்தனை புதிதாகப் புகுத்தப்படும் வாய்ப்பு அமைகிறது. மேலும், ஒப்பீட்டு நோக்கில் அற இலக்கியங்களைக் கற்பிப்பதின் வாயிலாக அவர்களை அடுத்தகட்டக் கல்விநிலைக்கு தயார்படுத்துவதும் தேவையான ஒன்றாகிறது.
மாணவர்களுக்குக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அற இலக்கியங்களைக் கற்பிப்பதற்கு முன் அவர்களுக்கு இந்திய அற இலக்கியங்களைப் பற்றியும், அவை தோன்றுவதற்கான அவசியத்தைப் பற்றியும் அறிமுகப்படுத்தி, பின்னர்த் தேர்ந்தெடுக்கப்பட்ட அற இலக்கியங்களை ஒப்பிட்டுக் கீழ்க்காணும் வகையில் கற்பித்து மதிப்பீடு செய்யலாம்.