ஐங்குறுநூற்று ஐந்திணைகளில் மலர்கள் பூத்துக் குலுங்குகி நிலங்களை அழகுறக் காட்சிப்படுத்துகின்றன. ஐங்குறுநூற்றில் தாமரை மலர், சிவதை மலர், நெய்தல் மலர், வேங்கை மலர், செங்கருங்காலிப் பூ, ஆம்பல் மலர், குவளை மலர், குரவமலர், ஞாழல்மலர், செருந்திமலர், தும்பை மலர், புன்னை மலர், கழிமுள்ளி மலர், மலை மல்லிகை, செங்காந்தள் பூ, இலவ மலர், கோங்கமலர், வேம்பின் பூ, முல்லைப்பூ, காயா மலர், கொன்றை மலர், பீர்க்கமலர், குருந்தம் பூ, கருவிளை மலர் என்று பலவகை மலர்கள் இடம்பெற்றுள்ளன. இம்மலர்களைத் தவிர, குறிப்பிட்டுப் பெயர் சுட்டப்படாத பல மலர்களும் நிலங்களின் செழுமையைக் காட்டுகின்றன. இம்மலர்களில் தாமரை, பகன்றை, நெய்தல், முல்லை, வேங்கை, ஆம்பல், குவளை ஆகிய ஏழு மலர்களின் வருணனைக் காட்சிகளையும், கூறுகளையும் எடுத்துரைப்பதாக இக்கட்டுரை அமைகின்றது.