களவு கற்புத் தன்மைகள் பொதுவாக அமைந்தபோதிலும், திணைவாரியாக சிறப்பம்சம் பெற்றதும் உண்டு. களவு, கற்பு என்பது அனைத்துத் திணைகளிலும் பொதுத் தன்மையாக இருந்தபோதிலும் குறிஞ்சித் திணைப் பாடல்களில் களவுத் தன்மைகள் மிகுதியாகப் பாடப்பட்டுள்ளன. பாலைத் திணைப் பாடல்களில் உடன் போக்குத் தொடங்கிய களவு வாழ்வும், பொருள்வயிற் பிரிதலான கற்பு வாழ்வும் மிகுதியாகப் பாடப்பட்டுள்ளன. முல்லைத் திணைப் பாடல்களில் தலைவன் தலைவிக்கு உண்டான கற்பு வாழ்வில் வரவிற்காகக் காத்திருத்தல் மையமாக அமைந்துள்ளன. மருதத்திணைப் பாடல் களில் பரத்தை விரும்பு தலில் தோன்றிய ஊடல் உணர்வுகளே மிகுதி. நெய்தல்திணைப் பாடல் களில் களவு, கற்பு ஆகிய இருதிறமும் இரங்கல் பின்புலத்தில் பாடப்பட்டுள்ளன. என்ற போதிலும் அதன் தனித்தன்மைகள் அலாதியானவை. இவ்விருதிறத் தன்மையை ஐங்குறுநூற்றில் நெய்தல் திணையில் ஒரு பத்தில் காணமுடிகிறது.