(i) கன்னடத்தில் ஞான பீடப் பரிசு பெற்றோர் எட்டுப் பேர். குவெம்பு (1967), பேந்த்ரே (1973), சிவராம் கரந்த் (1977), மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் (1983), க்ரு கோகர் (1990), ஆனந்தமூர்த்தி (1994), கிரிஷ் கர்னாட்(1998), சந்திர சேகர கம்பரா (2010) போன்றோர் ஆவர். மேற் சுட்டிய எண்பேரில் ‘‘மாஸ்தி வெங்கடேச ஐயங்காரைச் சிறுகதைத் தந்தை எனக் கன்னட நாட்டினர் பாரட்டுவர்’’ (இந்திய மொழிகளில் ஒப்பிலக்கியம் ப. 108). இவரால் இயற்றப்பட்ட ‘சிக்கவீர ராஜேந்திரா’ எனும் நாவல் 1983 ஆம் ஆண்டு ஞானபீடம் விருது பெற்றது. இருப்பினும் இவரது தாய்மொழி தமிழ் என்பது குறிப்பிடத்தக்கது.
(ii) திருக்குறள் மற்றும் உமர்கய்யாம் நூல்களைத் தமிழிலிருந்து கன்னடத்திற்கு மொழிபெயர்த்த டி. வி. குண்டப்பாவின் தாய்மொழியும் தமிழே.
(iii) கன்னடக் கவிஞர்கள் வரலாற்றை மூன்று பாகங்களாக ஆராய்ச்சி செய்து முதன்முதலில் வெளியிட்ட ஆர். நரசிம்மாச்சாரியாய், சிறந்த அறிஞரும் கவிஞருமான டி. பி. கைலாசம் போன்றோரின் தாய்மொழி தமிழே.
மேற்சுட்டியவாறு பல தமிழர்கள் கன்னட நாட்டிலிருந்து கன்னட மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியாகச் செயல்பட்டுள்ளனர். அவ் வரிசையில் தாய்மொழி கன்னடமா யிருப்பினும் தமிழ்மொழி மீது தீராப்பற்றுக் கொண்டு கன்னட மொழியிலிருந்து தமிழுக்கு முப்பதிற்கும் மேலான நூல்களை மொழியாக்கம் செய்தவர்களில் இறையடி யானும் அடங்குவர்.
கன்னட மண்ணில் பிறந்து தமிழிலக்கியத்தைத் தன் எழுத்து வாயிலாக உலகறியச் செய்யும் இறையடியான் நூல்களை மதிப்பிடும் முகமாக இக் கட்டுரை காணப்படுகிறது.