தமிழ்மொழியின் சிறப்பு அதன் தொன்மையில் மட்டுமில்லை, அதன் தொடர்ச்சியிலும் உள்ளது என்ற உண்மைக்குத் தக்க சான்றுதான் இன்றைய இணையத்தமிழ் வளர்ச்சி. முச்சங்கம் வைத்தோம் மூன்றுதமிழ் வளர்த்தோம் என்று நம் முன்னோரின் பெருமையை மட்டுமே பேசிக்கொண்டிருக்காமல், காலத்துக்கேற்ப நாம் நம் மொழியை இணையத்தில் கையாளக் கற்றுக்கொண்டோம். அதனால் இன்று நம் பழந்தமிழ் இலக்கியங்களின் பெருமை உலகத்தோரால் வியந்து நோக்கப்படுகிறது. தமிழ் இலக்கியப் பரப்பில் சங்ககாலத்தை மட்டுமே பொற்காலம் என்றழைக்கிறோம். அக்காலத்தில் எழுந்த சங்கஇலக்கிய நூல்கள் சங்கால மக்களின் வரலாறாகவே திகழ்கின்றன. பாட்டும், தொகையும் என்றழைக்கப்படும் இந்நூல்களுள் கலித்தொகையானது “கற்றறிந்தார் ஏத்தும் கலி” எனப் போற்றப்படுகிறது. இணையத்தில் கலித்தொகை பதிப்புகளையும், பதிவுகளையும் எடுத்தியம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.