அடியாரைத் தெய்வமாக்கிய மதுரகவியாழ்வாரின் அமுத மொழிகள்

Aṭiyārait teyvamākkiya maturakaviyāḻvāriṉ amuta moḻikaḷ

[ Published On: August 10, 2019 ]

தமிழின் கொடுமுடி இலக்கணமாகிய தொல்காப்பியத்திலேயே, மாலியம் எனப் போற்றப்பட்ட வைணவத்தின் பரம்பொருளாகக் கருதப்படும் மாயோன் குறிக்கப்பட்டுள்ளதைக் காணும்போது, வைணவத்தின் தொன்மையும், தமிழ் மண்ணில் அக்கொள்கை நிலவிய சிறப்பையும் உணர முடிகின்றது. “மாயோன் மேய காடுறை யுலகமும்” (தொல். அகத்.5) என்னும் தொடர், ஆ காப்போராகிய ஆயர்களின் தெய்வமாகக் கருதப்படும் மாயோன், தமிழர்களின் மேனி நிறமாகிய மாமையுடையராகக் கூறப்படுவதைக் காண்க. மாமை நிறத்தழகி எனத் தலைவியைப் பலகாலும் சங்க இலக்கியங்கள் புகழ்வதையும் காண்க. நாகரிகம் தோன்றிய நிலமாகப் பலராலும் கருதப்படும் முல்லை நிலமே, மாமை நிறத்தழகர்களின் நிலமாகவும் திகழ்கின்றது. தமிழ் நிலத்தின் தத்துவங்களில் ஒன்றாகிய வைணவம் காலப்போக்கில் பன்முகமாகக் கிளைத்து வளரத் தொடங்கியது. வைணவ அடியார்களாகிய ஆழ்வார்களால் சமயக் கருத்துக்களும், இறைவனின் வடிவழகும், பன்முகத் தன்மையும் நாலாயிர திவ்யப் பிரபந்தத்தில் பாடப்பட்டன என்பர் (ஆ. மணி 2018: XVI). இவை மட்டுமல்லாது, திராவிட வேதம் என்றழைக்கப்படும் பாடல்களைப் பாடிய நம்மாழ்வாரின் பெருமைகளும் சிறப்புக்களும் நாலாயிரத்தின் பாடுபொருளாக விளங்குவதைக் காணமுடிகின்றது. பன்னிரு ஆழ்வார்களில் ஆறாம் ஆழ்வாராகிய மதுரகவியாழ்வாரின் பாடல்களில் இடம்பெற்றுள்ள தனித்தன்மையுடைய கருத்துக்களை எடுத்துரைப்பது இவ்வுரையின் நோக்கமாகும்.

KEYWORDS

தமிழின் கொடுமுடி, மாலியம், மதுரகவியாழ்வார், அமுத மொழிகள்
  • Volume: 5
  • Issue: 18

Written by

CITATION

No Citation Included

Buy Books Offline